
சைபர் ஜெயா, ஜன 28 – தொடர்பு , பல்லூடக சட்டம் தொடர்பான திருத்தங்கள் மற்றும் இணைய பாதுகாப்பு, மிரட்டல் விவகாரம் தொடர்பான தண்டணைச் சட்டத் திருத்தங்களுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளார். விரைவில் அரசாங்க பதிவேட்டில் இந்த திருத்தங்கள் சட்டங்களாக பதிவு பெறும் என தொடர்பு அமைச்சர் பாமி பாட்ஷில் தெரிவித்தார்.
ஏற்கனவே தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் , இணைய பகடி வதை மீதான தண்டனைச் சட்டம் மற்றும் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களுக்கு பேரரசர் ஒப்புதல் அளித்துள்ளதாக தனக்கு தெரிவிக்கப்பட்டதாக பாமி கூறினார்.
அது அரசாங்க பதிவேட்டில் இடம்பெற்றவுடன் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், இணைய மிரட்டல் மற்றும் மோசடிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உட்பட விவகாரங்களை நாம் சமாளிக்க முடியும். மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தில் Chatbot Serenya.my இன் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்தார். வாட்சாப் தளம் மற்றும் சமூக ஊடகங்களில் போலி செய்திகளை தடுக்கும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியே இந்த முயற்சிகள் என அவர் சுட்டிக்காட்டினார். சமூக ஊடக உரிமம் குறித்து கருத்து தெரிவித்த பாமி , அந்த தளங்களை நடத்திவருவோர் இன்னும் ஆவணப்படுத்தும் செயல்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார். நேற்றைய நிலவரப்படி, மெட்டா பல ஆவணங்களை அனுப்பியுள்ளதோடு அதை நாங்கள் தற்போது கவனித்து வருகிறோம். மிக நீண்ட காலத்திற்குள் நாங்கள் உரிமம் பெறுவோம் என்று எதிர்பார்க்கிறோம் என அவர் கூறினார்.