
கோலாலம்பூர், ஜூலை-1 – பாலியல் தொல்லை தொடர்பில் கடந்தாண்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட UiTM முன்னாள் விரிவுரையாளர் ஒருவர், மீண்டும் அதே போன்றதொரு புகாரில் சிக்கியுள்ளார்.
இம்முறை நெகிரி செம்பிலான் நீலாயில் உள்ள தனியார் கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்துகொண்டதாக, 52 வயது அவ்வாடவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
21 வயது கல்லூரி மாணவியிடம் பாலியல் ரீதியாக பேசியதாக, மே 21-ஆம் தேதி சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை, அபராதம், பிரம்படி ஆகியவற்றில் குறைந்தது 2 தண்டனைகளை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 354-ஆவது சட்டதேதின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றச்சாட்டை மறுத்தவருக்கு, வழக்கு அடுத்த செவிமெடுப்புக்கு வரும் வரை, 3,000 ரிங்கிட் தொகையில் நீதிபதி ஜாமீன் வழங்கினார்.
படிப்பு சம்பந்தமாக பேச வேண்டுமெனக் கூறி ஏப்ரல் 23-ஆம் தேதி விரிவுரையாளரின் அலுவலகத்திற்கு தாம் அழைக்கப்பட்டதாக, புகார்தார பெண் சமூக ஊடகத்தில் குமுறிய போது, இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
படிப்பைப் பற்றி பேசாமல், பாலியல் உறவு தொடர்பாக பேசியதோடு, அநாகரீகமான படங்களை மடிக்கணினியில் டைப் செய்து தேடுமாறும் அவ்வாடவர் அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
இதனால் பயந்துபோன அப்பெண் உடடியாக தனது தோழிக்கு அழைத்துக் கூறி, கல்லூரி நிர்வாகத்திடமும் பின்னர் போலீஸிலும் புகார் செய்தார்.
இவர் ஏற்கனவே UiTM நிர்வாகத்தால் பணியிலிருந்து நீக்கப்பட்டவர் ஆவார்.
கடந்தாண்டு தொடரப்பட்ட வழக்கும் இன்னும் விசாரணையில் உள்ளது.