
ஜோர்ஜ்டவுன், நவம்பர் 22-பினாங்கில் இவ்வாண்டு இதுவரை 20 நில அமிழ்வுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்தாண்டு நெடுகிலும் வெறும் 8 சம்பவங்கள் மட்டுமே பதிவான நிலையில், இவ்வாண்டு 2 மடங்காக அவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின் வாயிலாக தெரிய வந்துள்ளது.
நில அமிழ்வுச் சம்பவங்கள் ஜோர்ஜ்டவுன், பாலேக் பூலாவ், செபராங் பிறை பகுதிகளில் தான் அதிகமாகப் பதிவாகியுள்ளன.
இவ்வேளையில் இவ்வாண்டு 68 நிலச்சரிவுகளும் பதிவாகியுள்ளன; கடந்தாண்டு அவ்வெண்ணிக்கை 28-டாக மட்டுமே இருந்தது.
நிலச்சரிவுகள் அனைத்தும் பினாங்குத் தீவில் மட்டுமே பதிவாகியுள்ளன; அவற்றில் வடகிழக்கு மாவட்டத்தில் 40 சம்பவங்களும், தென்மேற்கு மாவட்டத்தில் 28 சம்பவங்களும் அடங்கும்.
பினாங்கு பெருநிலத்தில் நிலச்சரிவு எதுவும் பதிவாகவில்லை.
கனமழை, பழையக் குழாய்களில் கசிவு, சாலைகளின் மண் அடைப்பு தரநிலைகள் பலவீனமடைதல் போன்றவை நில அமிழ்வுகளுக்கு காரணங்களாக இருந்துள்ளன.
இதையடுத்து, நிலத்தடி ராடார் கருவி மூலம் அபாயத்தைக் கண்டறிதல், RM8.79 மில்லியன் நிதியில் 16 அபாயகரமான மலைச் சரிவுகளைப் பழுதுபார்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அண்மையில் ஜோர்ஜ்
டவுன் ஜாலான் பர்மாவிலும், பாயான் லெப்பாஸின் சுங்கை ஆராவிலும் ஏற்பட்ட நில அமிழ்வுகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.



