
புக்கிட் மெர்தாஜாம், ஜனவரி 27 – குடிநுழைவுத் துறை அதிகாரிகளாக நடித்து கொள்ளையடித்த சம்பவத்தில் இரண்டு சந்தேக நபர்களை போலீசார் ஜனவரி 18 ஆம் தேதியன்று கோலாலம்பூரில் கைது செய்தனர்.
Seberang Perai Tengah காவல் துறை தலைவர் Helmi Aris கூறுகையில், ஜனவரி 10 ஆம் தேதி அன்று, Bukit Tengah Ladang Chip Jao பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளை நடந்ததாகவும், அதில் 44 வயதுடைய மியான்மார் நாட்டு ஆடவர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆறு பேர் புரோட்டான் X70 காரில் வந்து, தங்களை குடிநுழைவு அதிகாரிகள் என கூறி வீட்டிற்குள் நுழைந்து, பாராங்க் கத்தி காட்டி மிரட்டி, நகைகள், பணம் மற்றும் கைப்பேசிகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர் என்றும் அதில் சுமார் 4,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதென்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.
விசாரணையின் அடிப்படையில், போலீசார் ஜனவரி 18 ஆம் தேதி அன்று புக்கிட் ஜாலில் மற்றும் அம்பாங் பகுதிகளில் சோதனை நடத்தி, 38 மற்றும் 32 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்களை கைது செய்தனர். சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் புரோட்டான் X70 கார் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இரு சந்தேக நபர்களுக்கும் முந்தைய குற்றப்பதிவுகள் உள்ளதென்றும் கைதான நேரத்தில் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தில் தொடர்புடைய இன்னும் நான்கு சந்தேக நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



