
பட்டவொர்த், ஜனவரி-17 – பினாங்கு மாநிலத்தின் 28 தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் 283 B40 மாணவர்களுக்கு நேற்று புறப்பாட நடவடிக்கைளுக்கான சீருடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
மாக் மண்டின் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வை, RSN ராயர் தலைமையிலான பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஏற்பாடு செய்திருந்தது.
மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் லிம் ஹுய் யிங் (Lim Hui Ying) சிறப்பு வருகையளித்து, மாணவர்களுக்கு சீருடைகளை எடுத்து வழங்கினார்.

அவர் தமதுரையில், மலேசியா மடானி கொள்கைக்கு ஏற்ப தமிழ்ப் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் உரிய ஆதரவையும் உதவிகளையும் அரசாங்கம் வழங்கி வருமென உறுதியளித்தார்.
Pengakap சாரணர் இயக்கத்தை சேர்ந்த 112 மாணவர்கள், Tunas Kadet Remaja Sekolah இயக்கத்தைச் சேர்ந்த 158 மாணவர்கள், Pandu Puteri சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்த 13 மாணவிகள் தத்தம் சீருடைகளைப் பெற்றுக் கொண்டனர்.
ஒவ்வொரு உடையும் சுமார் RM180 மதிப்புடையது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கில், இந்த சீருடைகளுக்கான மொத்தச் செலவான 50,000 ரிங்கிட்டையும் துணையமைச்சரே ஏற்றுக் கொண்டார்.

இந்த உதவி மாணவர்களின் ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துப் பண்புகளை வளர்க்கும் நீண்டகால முதலீடாகும் என, அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் கூறினார்.
2023 முதல், பினாங்கு இந்து அறப்பணி வாரியம் 1,000-க்கும் மேற்பட்ட இந்து மாணவர்களுக்கு RM1 மில்லியனுக்கும் மேல் கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கு வழங்கியுள்ளது.
பெற்றோர்களும், ஆசிரியர்களும் பங்கேற்ற இந்நிகழ்வில் பினாங்கு ம.இ.கா தலைவர் டத்தோ தினகரன் ஜெயபாலனும் கலந்துகொண்டார்.



