Latestமலேசியா

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு ஓர் இந்துவே தலைமையேற்க வேண்டுமென, இரு முக்கிய இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-3, – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு ஓர் இந்துவே தலைமையேற்க வேண்டுமென, இரு முக்கிய இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. மலேசிய இந்து சங்கத்தின் பினாங்குக் கிளையும், மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் பினாங்குக் கிளையும் தனித்தனி அறிக்கையில் அக்கோரிக்கையை விடுத்துள்ளன.

ஓர் இந்து அமைப்பானது, இந்து மக்களின் மத, கலாச்சார மற்றும் சமூகத் தேவைகளைப் புரிந்துகொண்ட அர்ப்பணிப்புள்ள இந்துத் தலைவரால் வழிநடத்தப்பட வேண்டும் என, பினாங்கு இந்து சங்கம் தனதறிக்கையில் கூறியது.

இந்த அமைப்புகளின் தலைமைத்துவம், இந்து மரபுகள், மதிப்புகள் மற்றும் சமூகத்தின் அபிலாஷைகளுடன் ஆழமாக வேரூன்றிய தொடர்பைக் கொண்ட நபர்களிடம் தான் ஒப்படைக்கப்பட வேண்டும். அதுவே நியாயமும் கூட.

எனவே, இந்துக்களின் இந்த அடிப்படை உரிமையை மதிக்குமாறு, அரசு நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாக இந்து சங்கம் கூறியது.

இவ்வேளையில், மலேசிய இந்து தர்ம மாமன்றம் வெளியிட்ட அறிக்கையில், பினாங்கு இந்து அறப்பணி வாரியம் போன்ற முக்கியமான நிறுவனத்தின் தலைமைப் பதவி, சேவை செய்யும் சமூகத்தின் கலாச்சார – ஆன்மீக பாரம்பரியத்தை பிரதிபலிக்க வேண்டுமென வலியுறுத்தியது.

பினாங்கு இந்துக்களை வழிநடத்த, ஓர் இந்துவின் தலைமையின் கீழ், பினாங்கு அறப்பணி வாரியம் செயல்பட்டாலே அது சிறப்பாக இருக்குமென நாங்கள் நம்புகிறோம்.

எனவே, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமை, அது சேவை செய்ய விரும்பும் சமூகத்துடன் ஒத்துப்போவதை உறுதிச் செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அனைவரையும் மாமன்றம் கேட்டுக் கொண்டது.

இதனிடையே, நடப்புத் தலைவரான RSN ராயர் DAP மத்திய செயலவைத் தேர்தலில் தோல்வி கண்டதை அடுத்து, தலைமைத்துவ மாற்றம் குறித்த பேச்சு எழுந்துள்ளது. ராயருக்கு பதிலாக சீக்கியரான ஜக்டிப் சிங் தலைமையேற்பார் என்றும் ஆருடங்கள் கூறுகின்றன.

எனினும், இதற்கு ஆட்சேபனை குரல்கள் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!