ஜியோர்ஜ்டவுன், செப்டம்பர்-30 – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் (PHEB) தலைவராக அம்மாநிலத்தின் இரண்டாவது துணை முதல் அமைச்சர் ஜக்டீப் சிங் டியோ (Jagdeep Singh Deo) நியமிக்கப்படுவதே சிறந்ததாக இருக்கும்.
மாநில அரசின் இரண்டாவது மிக முக்கியப் பொறுப்பில் இருப்பதால், அவரால் மேலும் வெளிப்படையான தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்கிறார், உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr பி.ராமசாமி.
ஒரு சீக்கியராக இருந்து கொண்டு ஜக்டீப்பால் அவ்வாரியத்துக்குத் தலைமையேற்க முடியாதென்பதெல்லாம் அடிப்படையற்ற வாதமாகும்.
1906-ஆம் ஆண்டு பினாங்கு இந்து அறப்பணி சட்டமே, பரந்து விரிந்த இந்து சமூகத்தின் ஒரு பகுதியாக சீக்கியர்களை ஏற்றுக்கொள்வதை ராமசாமி சுட்டிக் காட்டினார்.
அப்படியும் ஜக்டீப் வேண்டாமென்றால், மாநில ஆட்சிக் குழு உறுப்பினரையாவது PHEB தலைமைப் பொறுப்புக்கு நியமியுங்கள் என்றார் அவர்.
இந்து அறப்பணி வாரியத்தை சரியான இலக்கில் கொண்டுச் செல்வதில்லை என அதன் நடப்புத் தலைவர் RSN ராயர் மீது அண்மையக் காலமாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அறப்பணி வாரியம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது.
ராயரோ, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர்.
இதனால் அறப்பணி வாரியத்தின் நிர்வாகம் சுமூகமாக இல்லையெனக் கூறப்படுகிறது.
ராயரும், அப்பதவியில் தாம் தொடர வேண்டுமா இல்லையா என்பதை முடிவுச் செய்யுமாறு DAP கட்சி மேலிடத்தைக் கேட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.