
செபெராங் ஜெயா, நவம்பர்-8 – பினாங்கில் ஜூரு டோல் சாவடி முதல் சுங்கை துவா டோல் சாவடி வரையில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து சீரமைப்புத் திட்டமான PTJSD விரைவுபடுத்தப்பட வேண்டும் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
நான்காண்டு கால இத்திட்டம் 2030-ஆம் ஆண்டு மத்தியில் முழுமையடையத் திட்டமிடப்பட்டிருந்தாலும், பணிகள் விரைந்து முடிக்கப்படுவதை காண தாம் விரும்புவதாக அவர் சொன்னார்.
விரைவாக முடித்தால் செலவுகள் குறையும்; மேலும் தினமும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பொது மக்களுக்கும் கூடிய விரைவில் நிவாரணம் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
எனவே திட்ட அனுமதிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் முன்னுரிமையுடன் விரைவுபடுத்தப்படுவது அவசியம் என்றார் அவர்.
இத்திட்டத்தில் மேம்பாலங்கள், உயர்மட்ட சாலைகள், சாலை சந்திப்பு கட்டுமானங்களும் அடங்கும்.
இதனால் போக்குவரத்து சீராகி, பயண நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பினாங்கு மக்களுக்கு நீண்ட காலமாக நிலவி வரும் போக்குவரத்து பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டிய நேரம் இது என, இன்று Seberang Jayaவில் அத்திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் அன்வார் குறிப்பிட்டார்.



