
இந்த ஆண்டு, பினாங்கு மாநில மாணவர்களுக்கு 100 புதிய மடிக்கணினிகளை விநியோகிக்கும் நல்லதொரு திட்டத்தை முன்னெடுத்துள்ளார் டாக்டர் லிங்கேஸ்வரன்.
தொழில்நுட்பத்தை அதிகளவில் சார்ந்திருக்கும் இன்றைய கல்வித் தேவைகளுக்கு ஏற்ப, மாணவர்கள் சிறந்த கற்றல் வசதிகளைப் பெற உதவும் ஒரு முயற்சியாக, இந்த மடிக்கணினிகள் அனைத்தும் 200,000 ரிங்கிட் மொத்த செலவில், வழங்கப்படுவதாகவும் இதற்கான அனைத்து நிதியுதவியும் தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாக லிங்கேஸ்வன் தெரிவித்தார்.

முதல் முறையாக சிட்டி பேவியூ ஹோட்டலில் அமைந்துள்ள மந்திரா உணவகத்தில் நடைபெற்ற விழாவில், 31 மடிக்கணினிகள் மாணவர்களுக்கு நேரில் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில் பினாங்கில் உள்ள தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த ஆண்டு 80 புதிய மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டன.
அதிகரித்து வரும் தேவைகளையும், மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து கிடைத்த மிகுந்த ஊக்கமளிக்கும் வரவேற்பையும் கருத்தில் கொண்டு இவ்வாண்டு மாணவர்களுக்கு 100 மடிக்கணினிகள் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டதாக லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
இனம், மதம் பேதமின்றி பினாங்கில் உள்ள மாணவர்களுக்கு இந்த மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு மாணவரும் தங்கள் கல்வியில் வெற்றிபெற சம வாய்ப்பு இருப்பதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்திற்கு மாணவர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதோடு பதிவு தொடங்கிய 72 மணி நேரத்திற்குள், மொத்தம் 352 மாணவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த நிலையில் தீவிர பரிசீலனைக்குப் பின் இந்த ஆண்டுக்கான 100 மாணவர்கள் தேர்ந்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ,ஒன்றிணைந்து இதை வெற்றி பெறச் செய்த லிம் குவான் எங், RSN ராயர் மற்றும் டத்தோ தினகரன் ஆகியோருக்கு தனது நன்றியையும் பாராட்டையும் லிங்கேஸ்வரன் தெரிவித்துக் கொண்டார்.



