வாஷிங்டன், நவம்பர்-23, பல இரகசியங்களையும் ஆச்சரியங்களையும் கொண்ட இந்த பிரபஞ்சத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் asteroids எனப்படும் சிறுகோள்களில் ஒன்று, பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனையும் கோடீஸ்வரராக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும் சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
Asteroids என்றாலே நம்மில் பலருக்கு விண்வெளியில் சுற்றும் ஒன்றுக்கும் உதவாத பாறைகளே ஞாபகம் வரும்.
ஆனால், மனிதன் கண்டுபிடித்த ஆகப் புதிய சிறுகோள், விலைமதிப்பற்ற உலோகங்களால் ஆனதாகத் தெரிய வருகிறது.
செவ்வாய் (Mars) மற்றும் வியாழன் (Jupiter) இடையே சுற்றும் இந்த பெரிய உலோக சிறுகோள், 16 சைக் ( 16 Psyche) என்று அழைக்கப்படுகிறது.
மனிதன் கண்டுபிடித்த 16-வது சிறுகோள் என்பதால், அதன் பெயரில் 16 சேர்க்கப்பட்டது.
சுமார் 226 கிலோ மீட்டர் அகலம் கொண்ட அதனை மனிதன் கைப்பைற்றி, ஆளுக்கு சமமாகப் பிரித்துக் கொண்டால் கூட, இந்த பூமியில் வாழும் அனைவரும் கோடீஸ்வரராகி விடுவோம்.
அந்த அளவுக்கு இந்த 16 Psyche சிறுகோள் விலைமதிப்பற்ற உலோகங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதில் 10,000 டாலர் குவாட்ரில்லியன் (quadrillion) மதிப்புள்ள தங்கம், இரும்பு, நிக்கல் இருக்கலாமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ‘கோடீஸ்வர’ சிறுகோளை மேலும் ஆராய்வதற்காக , அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கடந்தாண்டு அக்டோபரில் Psyche விண்கலத்தைப் பாய்ச்சியது.
ஆனால், 3.5 பில்லியன் கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால், 2029 ஆகஸ்டில் தான் அது இலக்கைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.