
மஸ்ஜிட் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரத்தில் இந்துக்களை சினமூட்டும் வகையில் facebook-கில் பதிவிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சம்ரி வினோத் (Zamri Vinoth).
‘வேல் வேல்’ வீடியோ சர்ச்சையில் இந்துக்களை இழிவுப்படுத்திய போதே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம்; ஆனால் நாடு முழுவதும் சுமார் 1,000 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுத்தபாடில்லை.
அதன் விளைவு தான் இன்று சம்ரி வினோத் மீண்டும் இந்துக்களை சீண்டி பார்த்துள்ளார் என, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கூறினார்.
விசாரணை அறிக்கையை சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் ஆய்வு செய்து வருவதாக, மார்ச் 12-ஆம் தேதி தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் (Razarudin Husain) கூறியிருந்தார்.
ஆனால் இன்று வரை நடவடிக்கை இல்லை; சட்டத் துறைத் தலைவரின் அலுவலகம் மௌனம் காப்பது சம்ரி வினோத்துக்கு தோதுவாக அமைந்து விட்டது.
தன்னைக் கேட்க ஆளில்லை என்ற எண்ணத்தில் அவர் தொடர்ந்து இந்துக்களின் மனதைப் புண்படுத்தி வருவதாக ராயர் சொன்னார்.
அக்கோவில் விஷயத்தை நல்லிணக்க முறையில் தீர்க்க சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளும் முழு மூச்சாக ஈடுபட்டு வரும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் சம்ரி வினோத்தில் செயல் இருப்பதாக ராயர் சாடினார்.
நாட்டிலுள்ள பெரும்பாலான இந்து ஆலயங்கள் ஊரார் நிலத்தில் கட்டப்படுவதும், பின்னர் உரிமையாளர் கேட்டால் பிரச்னை செய்வதும் இந்துக்களுக்கு வழக்கமாகி விட்டதாக, தனது facebook பதிவில் சம்ரி வினோத் பதிவிட்டுள்ளார்.
“உங்களுக்கு உரிமை இல்லையென்று தெரிந்தும் ஊரார் நிலத்தில் உங்கள் தெய்வங்களை கொண்டு வைக்கிறீர்களே, அது உங்களுக்கு அவமானமாக இல்லையா?” என அவர் படுமோசமாக விமர்சனம் செய்தார்.
“இனியும் அரசாங்கம் அமைதியாக இருக்கக் கூடாது; ஊரார் நிலங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள ஆலயங்களை இடித்துத் தள்ள வேண்டும்; மற்றவர்களுக்கு அது பெரும் பாடமாக அமைய வேண்டும்” என சம்ரி வினோத் கூறியிருப்பது, ஏற்கனவே சினமடைந்துள்ள இந்துக்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது.