
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வியட்நாம், இலங்கை பெண்கள் ‘இறக்குமதி’ பரிந்துரை; தென் கொரிய அதிகாரி பணி நீக்கம்
சியோல், பிப்ரவரி-11,
தென் கொரியாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, வியட்நாம் மற்றும் இலங்கையிலிருந்து பெண்களை ‘இறக்குமதி’ செய்து கிராமப்புற ஆண்களுடன் திருமணம் செய்து வைக்க மாவட்ட அதிகாரி முன்வைத்த பரிந்துரையால், கடும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த கருத்து பாலின பாகுபாடு மற்றும் இனவெறி என கண்டனங்கள் எழுந்து, அந்த அதிகாரி உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
தென் கொரியா, தற்போது உலகின் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட நாடாக உள்ளது.
பிறப்பு விகிதத்தை உயர்த்த அரசு பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும், பெரியதாய் முன்னேற்றமில்லை.
இப்படியே போனால், தற்போது 50 மில்லியனாக உள்ள மக்கள் தொகை, அடுத்த 60 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்து விடுமென்ற அச்சம் எழுந்துள்ளது.
எனினும் அதற்காக இதுபோன்ற பரிந்துரையெல்லாம் மனித கண்ணியத்தையும் சமத்துவத்தையும் புறக்கணிப்பதாக கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
மக்கள் தொகை சரிவுக்குத் தீர்வு காணும் முயற்சிகள் மனிதரிடையிலான மரியாதை மற்றும் சமத்துவத்தை மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.



