
கோலாலம்பூர், பிப்ரவரி-2- பத்து மலை ஆற்றங்கரையின் புதிய கம்பீரமாக 20 அடி உயரத்தில் சக்தி வேல் நிறுவப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தைப்பூசத்தின் போது நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், நேர்த்திக்கடனைச் செலுத்தும் முன்னர் தாங்கள் வணங்கிச் செல்ல ஏதுவாக அங்கு வேல் நிறுவப்பட வேண்டுமென பக்தர்கள் கோரி வந்தனர்.
அவர்களின் வேண்டுகோளை பத்து மலை நிர்வாகம் இன்று நிறைவேற்றி வைத்துள்ளது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையில் இன்று காலை 10 மணிக்கு வேலை நிறுவும் பணிகள் தொடங்கின.
இனி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஆற்றங்கரையில் அவ்வேலை வணங்கி விட்டுச் செல்லலாம்.
அவர்களை வேல் காக்குமென தான் ஸ்ரீ நடராஜா நம்பிக்கைத் தெரிவித்தார்.
இன்றைய வேல் நிறுவும் நிகழ்வில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.
இதனிடையே மஹிமா தலைவரும் தேவஸ்தான அரங்காவலுருமான டத்தோ சிவக்குமார், அடுத்த வாரம் அனுசரிக்கப்படவுள்ள தைப்பூசத் திருநாள் சிறப்பாக நடந்தேற பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசியாவின் அடையாளமாய் திகழும் பத்துமலையின் ஆற்றங்கரையில் இந்த 20 அடி சக்தி வேல் வீற்றிருப்பது, இவ்வாண்டு பத்து மலை தைப்பூசத்திற்கு மேலும் மெருகூட்டியுள்ளது.