
புத்ராஜெயா, நவம்பர்-12 – சபா மாநிலத்துக்கான 40% கூட்டரசு வருமான விவகாரத்தில் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து புத்ராஜெயா மேல்முறையீடு செய்யாது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற நேற்றைய சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 112C-ஆவது விதியின் கீழ் சபாவுக்கான அந்த ‘சிறப்பு உரிமையை’ மத்திய அரசாங்கம் மதிப்பதாக, தேசிய சட்டத் துறைத் தலைவர் தெரிவித்தார்.
எனவே, கோத்தா கினாபாலு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப, அவ்விஷயம் தொடர்பில் சபா அரசாங்கத்துடன் புத்ராஜெயா உடனடி பேச்சுவார்த்தையைத் தொடங்கும் என்றார் அவர்.
அக்டோபர் 17-ல் அளித்தத் தீர்ப்பில், 1974 முதல் சபாவுக்கு வழங்கப்பட வேண்டிய வருமான பங்கீட்டை மத்திய அரசாங்கம் வழங்கத் தவறி விட்டதாக உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.
இது 1963 மலேசிய ஒப்பந்தத்திற்கு எதிரானது என சபா அரசியல்வாதிகளும் போர்க்கொடி உயர்த்தினர்.
அன்வார் அமைச்சரவையிலிருந்து சபாவைச் சேர்ந்த ஒருவர் விலகியே விட்டார்.
இந்நிலையில் புத்ராஜெயாவின் இம்முடிவு இவ்விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.



