கோலாலம்பூர், டிச 17 – பூச்சோங் ஜெயாவில் (Puchong Jaya) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காற்பந்து போட்டியில் பெனால்டி வழங்கியதற்காக நடுவர் ஒருவர் பல விளையாட்டாளர்களால் தாக்கப்பட்டு மற்றும் குத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து , விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் A.A அன்பழகன் தெரிவித்தார்.
போட்டியின் நடுவராக இருந்த 38 வயதுடைய உள்நாட்டு நபர் ஒருவர் செய்துள்ள புகாரையும் போலீஸ் பெற்றதாக அவர் கூறினார். வன்செயல் குற்றத்திற்காக தண்டனைச் சட்டம் 160வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அன்பழகன் கூறினார்.
சம்பந்தப்பட்டவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 1,000 ரிங்கிட்வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும், இந்த வழக்கு இன்னும் போலீஸ் விசாரணையில் உள்ளதால், இது குறித்து பொதுமக்கள் எவரும் ஆருடங்களை வெளியிட வேண்டாம் என்றும் அன்பழகன் வலியுறுத்தினார்.
எதிரணிக்கு வழங்கப்பட்ட பெனால்டியினால் அதிருப்தியடைந்த ஒருவர் அந்த நடுவரை தாக்கியுள்ளார். தாக்கிய நபர் அந்த நடுவருக்கு அறிமுகமானவர் என்றும் கூறப்படுகிறது.