
கோலாலம்பூர், பிப் 21 – கோலாலம்பூர், பெட்டாலிங் ஸ்திரிட்டில் உள்நாடு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சு 360,000 ரிங்கிட் மதிப்புள்ள 5,500 போலி பொருட்களை பறிமுதல் செய்தது.
கைப்பைகள், இடைவார்ப்பட்டைகள், பணப்பைகள், செருப்புகள், கைக்கடிகாரங்கள் மற்றும் , தொப்பிகளும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் அடங்கும் என உள்நாடு வர்த்தக மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் கோலாலம்பூர் கிளையின் துணை இயக்குநர் நுருல் ஷரினா முகமட் அனுவார் ( Nurul Syarina Md Anuar ) தெரிவித்தார்.
50 ரிங்கிட் முதல் 450 ரிங்கிட்வரை விற்கப்பட்ட இந்த பொருட்கள் நேற்று மாலை 3.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்டது.
கோலாலம்பூர் மாநகர் மன்றம், குடிநுழைவுத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளின் உதவியோடு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
2023 ஆம் ஆண்டு முதல், ஜாலான் பெட்டாலிங் போலிப் பொருட்களை விற்பனை செய்வதில் பிரபலமான இடமாக அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி அறிக்கையில் மீண்டும் பட்டியலிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் இருந்து ஜலான் பெட்டாலிங் நீக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மலேசியா வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது உலகெங்கிலும் உள்ள வர்த்தக முத்திரை உரிமையாளர்களை உள்ளடக்கிய முதலீடுகளை பாதிக்கும் என்று சோதனை மேற்கெள்ளப்பட்ட இடத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது
நுருல் ஷரினா தெரிவித்தார்.