தெலுக் இந்தான், நவம்பர்-5 – பேராக், தெலுக் இந்தானில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பட்டாசுகளும் வானவெடிகளும் வெடித்ததில் விழா மண்டபமே தீ பற்றிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சனிக்கிழமை இரவு 11.38 மணியளவில் Padang Speedy அருகேயுள்ள, Arena Square Teluk Intan திறந்தவெளி மண்டபத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
மண்டபத்தின் கூரையை நோக்கி பாய்ச்சப்பட்ட வானவெடிகளின் தீப்பொறி பட்டு தீப்பரவியிருக்கலாமென, தீயணைப்பு-மீட்புத் துறையின் தடயவியல் குழுவுடன் இணைந்து மேற்கொண்ட தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக, ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் கூறியது.
மண்டபத்தின் கூரை அப்பெரும் தீயில் அழிந்துபோனது.
தெலுக் இந்தான் நகராண்மைக் கழகத்திற்குச் (MPTI) சொந்தமான அம்மண்டபத்தை வாடகைக்கு எடுத்திருந்த ஏற்பாட்டாளர், 500 விருந்தினர்கள் எடுத்து விளையாடுவதற்காக பல்வேறு பட்டாசுகளையும் வானவெடிகளையும் தயார் செய்து வைத்துள்ளார்.
ஆனால், பட்டாசு மற்றும் வானவெடி பயன்பாட்டுக்கான முறையான உரிமத்தை அவர் பெற்றிருக்கவில்லை.
அது 1957-ஆம் ஆண்டு வெடிப்பொருட்கள் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
எனவே பிறந்தநாள் விழா ஏற்பாட்டாளரான 24 வயது இளைஞர் விசாரணைக்காக நேற்று கைதானார்.
லாரி ஓட்டுநரான அந்நபரைத் தடுத்து வைக்க இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படவிருக்கிறது.