ஷா ஆலாம், நவம்பர்-16 – பெர்சாத்து கட்சியின் பூமிபுத்ரா அல்லாத உறுப்பினர்களுக்கான Sayap Bersekutu பிரிவுக்கு இளையோரிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
எதிர்கட்சியாக இருந்தாலும், மக்களுக்கான அதன் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு ஏராளமானோர் அதில் உறுப்பினர்களாகி வருவதாக, செலாயாங் பெர்செக்குத்து தலைவர் ஆர். ரெஜின் குமார் தெரிவித்தார்.
மலாய்க்காரர் அல்லாதோருக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
இவ்வேளையில், எதிர்கட்சியாக இருந்த போது கொடுத்த பல வாக்குறுதிகளை நடப்பு அரசாங்கம் நிறைவேற்றவில்லை.
2025 பட்ஜெட்டில் கூட இந்தியச் சமூகத்துக்கு 130 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்தியர்கள் அதிருப்தியிலிருப்பதாக, Sayap Bersekutu தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ சஞ்சீவன் கூறினார்.
இந்நிலையில் புறக்கணிக்கப்படும் மக்களுக்கான குரலாக பெர்சாத்து விளங்குவதால் ஏராளமான இந்தியர்கள் கட்சியில் இணைகின்றனர்.
தற்போது மொத்தமாக 30,000 முதல் 35,000 மலாய்க்காரர் அல்லாத உறுப்பினர்களைக் கொண்டுள்ள Bersekutu பிரிவில் இந்தியர்கள் மட்டும் 15,000 முதல் 20,000 பேர் வரை இருப்பதாக சஞ்சீவன் சொன்னார்.
இன்று ஷா ஆலாமில் நடைபெற்ற பெர்சாத்து Sayap Bersekutu பிரிவின் சிலாங்கூர் மாநில மாநாட்டில் பங்கேற்ற போது அவர் அவ்விவரங்களை பகிர்ந்துகொண்டார்.
200 பேராளர்கள் பங்கேற்ற அம்மாநாட்டை பெர்சாத்து கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
மலாய்க்காரர் அல்லாதோரை பெர்சாத்து கட்சிக்கு கவர்ந்திழுக்கும் முயற்சியில் Sayap Bersekutu பிரிவினர் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக செயலாற்ற வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் மாநில பெர்சாத்து தலைவர் டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலியும் மாநாட்டில் கலந்துகொண்டார்.