பொது அமைதிக்கு பங்கம்: பணிக்குழுவை அமைக்க அரசாங்கம் தயார்

கோலாலம்பூர், பிப்ரவரி-28 – பொது மக்களின் சீற்றத்தைத் தூண்டக் கூடிய, குறிப்பாக வேண்டுமென்றே எழுப்பப்படும் மதப் பிரச்னைகளைக் கையாள, சிறப்பு செயற்குழு அல்லது பணிக்குழுவை அமைக்க அரசாங்கம் தயாராக உள்ளது.
இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ Dr மொஹமட் நாயிம் மொக்தார் அதனைத் தெரிவித்தார்.
இன மத உணர்ச்சிகளைத் தூண்டும் விஷயங்களை எழுப்பி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தரப்பை அரசாங்கம் எப்படி கையாளுகிறது என மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் அவ்வாறு சொன்னார்.
மத விவகாரங்களை எழுப்பி சமூகத்தில் குறிப்பாக இஸ்லாமியர்கள் மத்தியில் கவலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவோருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது.
தேச நிந்தனைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம், பல்லின மத உணர்ச்சிகளைத் தொடும் அம்சங்கள் அல்லது எழும் குழப்பங்களுக்கு உரிய விளக்கம் அளிக்க, கலந்தாய்வுகளும் நடத்தப்படுகின்றன.
கடந்தாண்டு மே 7 தொடங்கி 2 நாட்களுக்கு பெட்டாலிங்கில் நடைபெற்ற மதத் தலைவர்களுக்கான அனைத்துலக மாநாடும் அவற்றில் அடங்குமென்றார் அவர்.