
கோலாலம்பூர், பிப்ரவரி-20 – பொது இடங்களில் சொற்பொழிவாற்ற சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் Dr சா’க்கிர் நாயக்கிற்கு தடை உத்தரவு எதுவுமில்லை.
உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசுத்தியோன் இஸ்மாயில் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
2019-ஆம் ஆண்டில் அவருக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது உண்மைதான்; ஆனால் அது இப்போது அமுலில் இல்லையென அவர் சொன்னார்.
மக்களவையில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் அதனைத் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக் காரணங்கள் மற்றும் இன நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்காக 2019-ஆம் ஆண்டு சா’க்கிர் நாயக்கிற்கு அந்தத் தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மலேசியாவில் பிறந்த இந்தியர்கள் அப்போதையப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட்டை விட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிக விசுவாசமுள்ளவர்கள் என சா’க்கிர் கூறியதை அடுத்து, உள்நாட்டில் எந்த இடத்திலும் சொற்பொழிவாற்ற அவர் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், பணமோசடி வழக்கில் இந்தியாவில் முன்னர் தேடப்பட்ட மும்பையைச் சேர்ந்த மதபோதகரான சா’க்கிர், கடந்த மாதம் பெர்லிஸில் ஒரு மாநாட்டில் உரையாற்றியதாகக் கூறப்பட்டது.
அதனைச் சுட்டிக் காட்டியே ராயர் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
மலேசியாவில் பிரச்சினையை ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் வரை, சா’க்கிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்துவது குறித்து பரிசீலிக்கப் போவதில்லை என, கடந்த ஆகஸ்டில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.