
பெட்டாலிங் ஜெயா, நவம்பர்-12,
சர்ச்சைக்குப் பெயர் பெற்றவரான இன்ஸ்பெக்டர் ஷீலா ஷரோன் ஸ்டீவன் குமார், நீதிமன்றத்தில் மீண்டும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
நவம்பர் 4-ஆம் தேதி டாங் வாங்கி பகுதியில் குற்றச்செயல் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரரை, அவரின் பணியை செய்யவிடாமல் தடுத்ததாக பெட்டாலிங் ஜெயா மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 37 வயது ஷீலா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
எனினும், அதனை மறுத்து அவர் விசாரணைக் கோரினார்.
இதையடுத்து 6,600 ரிங்கிட் தொகையில் ஒருநபர் உத்தரவாதத்தின் பேரில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
வழக்கு வரும் ஜனவரி 20-ஆம் தேதி மறுசெவிமெடுப்புக்கு வருமென நீதிமன்றம் அறிவித்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை அல்லது 10,000 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.
முன்னதாக நீதிமன்றத்திற்கு வந்த ஷீலாவைப் புகைப்படம் எடுத்த செய்தியாளர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.
தனது அனுமதி இல்லாமல் படம் எடுக்க முடியாது என்றும், கவனமாக இருங்கள் என்றும் அவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த வாரம், ஷீலாவே பதிவேற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
அதில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி பாகிஸ்தான் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை அச்சுறுத்துவதாக ஷீலா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.



