
கோலாலம்பூர், பிப்ரவரி-5-நேற்று மக்களவையில் வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் பயன்படுத்திய ‘Alhamdulillah’ மற்றும் ‘bersyukur’ போன்ற இஸ்லாமிய சொற்கள் குறித்து சூடான விவாதம் எழுந்தது.
எதிர்க்கட்சியான பாஸ் எம்.பி. Siti Zailah Yusof, ஙா தொடர்ந்து இஸ்லாமிய சொற்களைப் பயன்படுத்துவதை கேள்வி எழுப்பினார்.
‘Alhamdulillah’ என்பது அல்லாஹ்வை புகழும் சொல், வெறும் நன்றி சொல்லும் வார்த்தை அல்ல…எனவே மாற்று மதத்தவர் அவற்றைப் பயன்படுத்தினால் அவை உறுப்பினர்களைக் குழப்புவதற்கு அது சமம் என Zailah சுட்டிக் காட்டினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சரோ, இந்த சொற்கள் அரபு மொழியில் ‘நன்றி’ என்ற அர்த்தத்தைக் கொண்டவை என்றும், எனவே பிரிவினையை தூண்டும் விவாதங்களில் கவனம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
விவாதம் சூடுபிடிக்கவே, ஙா கோர் மிங்கைத் தற்காக்கும் வகையில் அரசாங்க ஆதரவு எம்.பிக்கள் தலையிட்டனர்.
ஷா ஆலாம் உறுப்பினர் Azli Yusof குறுக்கிட்டு, அரபு நாடுகளில் முஸ்லீம் அல்லாதவர்களும் இத்தகைய சொற்களைப் பயன்படுத்துவதாகக் கூறினார்.
எனவே ஒரு முஸ்லீமாகிய தமக்கு, ஙா கோர் மிங் இவ்வாறு சொல்வதை கேட்டு உள்ளபடியே மகிழ்ச்சி எனவும், ஒருநாள் இஸ்லாத்தை அவர் ஏற்றுக்கொள்வார் என்றும் Azli நம்பிக்கைத் தெரிவித்தார்.



