
தெலுக் இந்தான், அக்டோபர்-27,
தெலுக் இந்தான், ஜாலான் மாக் இந்தானில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கு, அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ங்கா கோர் மிங் மொத்தம் RM12,000 நிதியுதவி வழங்கியுள்ளார்.
வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சருமான கோர் மிங், கோலாலாம்பூரில் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்றிருந்ததால், அவர் சார்பில், பேராக் ஆட்சிக் குழு உறுப்பினரும் பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினருமான வூ கா லியோங் (Woo Kah Leong) அவ்வுதவிகளை நேரில் சென்று வழங்கினார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் RM2,000 வழங்கப்பட்டது; குறிப்பாக, அவர்கள் வீட்டு உரிமையாளர்கள் அல்லாமல் வாடகையாளர்கள் என்பதையும் பொருட்படுத்தாமல், அவர்களின் வாழ்வாதார சுமையை குறைக்கும் வகையில் இந்த உதவி அளிக்கப்பட்டது.
புதிய வீடு தேடவும், வேலை மற்றும் குழந்தைகளின் கல்வி தொடரவும் உதவும் வகையில் உடனடி நிவாரணமாக இது அமைவதாக, வூ கா லியோங் தெரிவித்தார்.
இவ்வேளையில், வெள்ளம், தீ விபத்து போன்ற உள்ளூர் பேரிடர் நிர்வாகத்தில் ஹிலிர் பேராக் மாவட்ட அதிகாரி Mufidah தலைமையிலான பேரிடர் மேலாண்மை செயலகம் ஆற்றி வரும் ஆக்கரமாக சேவைக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
தெலுக் இந்தான், கடந்த வாரம் தைப்பிங் மற்றும் மஞ்சோங் போல வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை என்றாலும், வரும் நவம்பர் மாத தொடக்கத்தில் கடல் நீர் உயர்வு மற்றும் கனமழை வாய்ப்புகள் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் நினைவூட்டினார்.



