பாலேக் பூலாவ் , டிச 26 – மற்றவர்களின் வங்கிக் கணக்கை வைத்திருந்ததாக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை 28 வயது இளைஞரும் மற்றொரு பெண்மணியும் மறுத்தனர்.
சரக்குப் பொருட்களை விநியோகிக்கும் முகமட் ஹரிசி அபு பாக்கார் (Muhamad Harizi Abu Bakar) என்பவர் அல்பான் சுதேஸ் ஜோர்ஸ் (Aalban Sudesh George) என்பவருக்கு சொந்தமான 10,800 ரிங்கிட்டைக் கொண்ட பி.எஸ்.என் (BSN) வங்கிக் கணக்கை வைத்திருந்ததாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
மேலும் 62 வயதுடைய லோ தெக் தியோங் (Law Teck Teong) என்ற நபரின் 11,680 ரிங்கிட்டைக் கொண்ட BSN வங்கிக் கணக்கை வைத்திருந்ததாக இரண்டாவது குற்றச்சாட்டும் அவர் மீது கொண்டு வரப்பட்டடது.
அதோடு முகமட் ஹரிசி தனக்கு சொந்தமான ஏ.டி.எம் (ATM) கார்டுகளை இருவரிடம் வழங்கியிருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தண்டனை சட்டத்தின் 424விதி உட்பிரிவு B யின் கீழ் கொண்டுவரப்பட்ட அந்த குற்றச்சாட்டுக்களை முகமட் ஹரிசி மறுத்தார்.
அவருக்கு 6,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு, அவர் மீதான குற்றச்சாட்டு ஜனவரி 27 ஆம் தேதியன்று மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் என மாஜிஸ்திரேட் சியா ஹூவே (Chia Huey) தெரிவித்தார்.
இதனிடையே யோ பெய் லிங் (Yeoh Pei Ling) என்பவரின் 750 ரிங்கிட்டிலுள்ள Hong Leong வங்கிக் கணக்கை வைத்திருந்ததாக 44 வயதுடைய பெண் ஆய்வாளர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அந்த ஆய்வாளர் தனது ஏ.டி.எம் கார்டை கூ சன் லுங் (Koo Sin Lung) என்பவரிடம் வழங்கியிருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்த பெண்ணுக்கு 1,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு அவர் மீதான வழக்கு ஜனவரி 22 ஆம் தேதி மறுவிசாரணைக்கு செவிமடுக்கப்படும்.