
கோலாலம்பூர், டிச 31 – மலரும் 2026 புத்தாண்டு மலேசிய இந்திய சமுதாயத்திற்கு வலிமையையும் அரசியல் ஒருமைப் பாட்டையும் அளித்திட வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S. A . விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்திய சமுதாயம் இப்புத்தாண்டில் வளமும் நலமும் பெற்று தங்கள் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்திட எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டும் என்று தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார். ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மலேசிய இந்தியர்களின் அரசிரசியல்-சமூகம்-பொருளாதாரம்- கல்வி-சமயம் சார்ந்து தொடர்ந்து ஆக்ககரமாக மஇகா தொய்வின்றி செயல்பட்டு வருகிறது. கல்வி மறுமலர்ச்சியில் இந்திய சமுதாயம் உன்னத நிலையை அடைய வேண்டும் என்பது மஇகா-வின் நிலைப்பாடாகும் என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அந்த வகையில் துன் சாமிவேலு அவர்களின் சிந்தனைக்கேற்ப ஒவ்வொரு பட்டதாரியை உருவாக்கும் கடப்பாட்டில், மஇகாவின் கல்விக் கரமான எம்.ஐ.இ.டி. யின் கீழ் இயங்கும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், டேப் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் மூலம் ம.இ.கா கல்விச் சேவை வழங்கி வருகிறது. இந்திய சமுதாயம் கல்வியில் சிறந்த அடைவு நிலையை எட்டுவதுடன் பொருளாதார மேம்பாடு, வளப்பம், சமுதாய ஒற்றுமை, ஆன்மீக மறுமலர்ச்சி ஆகியவற்றை இந்த ஆண்டில் அடைந்திட ம.இ.கா சார்பிலும் தனது குடும்பத்தின் சார்பிலும் வாழ்த்துவதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



