புத்ராஜெயா, டிசம்பர்-13, முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் முஹமட்டும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்களும், ‘மலாய்க்காரர்களின் பொதுவான எதிரிக்கு’ எதிராக அணியைத் திரட்டுகின்றனர்.
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ், மலாய்க்காரர்கள் படிப்படியாக தங்களின் உரிமைகளை இழந்து வருகின்றனர்.
எனவே, அச்சமூகத்தின் உரிமைக் காக்க தாங்கள் ஒன்றிணைவதாக, புத்ராஜெயாவில் நடைபெற்ற வட்டமேசைக் கலந்துரையாடலுக்குப் பிறகு, செய்தியாளர் சந்திப்பில் மகாதீர் சொன்னார்.
அந்த ‘பொது எதிரியைத்’ தடுக்கவில்லை என்றால், சொந்த மண்ணிலேயே மலாய் சமூகம் அதிகாரமிழந்து நிற்க வேண்டியது தான் என 99 வயது மகாதீர் கூறிக்கொண்டார்.
தைரியமாகக் குரல் எழுப்பிய மலாய்காரர்களுக்கு இந்த அரசாங்கத்தின் கீழ் பெரும் அழுத்தம் தரப்படுகிறது.
கைதுச் செய்யப்படுவீர்கள், நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவீர்கள் என அவர்கள் மிரட்டப்படுகின்றனர்.
எனவே தான் கட்சி எல்லை கடந்து ஒன்றிணைய வேண்டியது அவசியமென பெரும்பாலான மலாய்க்காரர்கள் கருதுவதாக மகாதீர் சொன்னார்.
மற்றொரு முன்னாள் பிரதமரும் பெரிக்காத்தான் தலைவருமான தான் ஸ்ரீ முஹிடின் யாசின், பாஸ் கட்சியின் உதவித் தலைவர் இட்ரிஸ் அஹ்மாட், அம்னோ முன்னாள் பொதுச் செயலாளர் தான் ஸ்ரீ அனுவார் மூசா உள்ளிட்டோர் அந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.