
கோலாலம்பூர் – ஜூலை-20 – நாட்டில் குறிப்பாக தீபகற்பத்தின் மேற்குக்கரை மாநிலங்களை, திடீர் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.
இந்த எல்லை கடந்த புகைமூட்டத்துக்கு, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்டுள்ள 79 வெப்பப் புள்ளிகளே காரணமாகும்.
தென்மேற்கு காற்று, அப்புகை மூட்டத்தை மலேசியாவின் மேற்குக்கரைக்குக் கொண்டு வந்திருக்கக் கூடுமென, MET Malaysia எனப்படும் மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறை கூறியது.
அடுத்த சில நாட்கள் வரையாவது இந்த புகைமூட்டம் நீடிக்கக் கூடும்; காரணம், காற்றின் திசையில் மாற்றமில்லை; பெரிய மழைப் பெய்யவும் வாய்ப்பில்லை என MET Malaysia விளக்கியது.
எனவே, நிலைமையை மோசமாக்கும் வகையில் திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என, பொது மக்களை அது அறிவுறுத்தியது. முன்னதாக, போர்டிக்சனில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவானது குறிப்பிடத்தக்கது.
கோலாலம்பூரிலும் புகைமூட்டம் காணப்படும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின.