
சிங்கப்பூர், ஏப்ரல்-13-சிங்கப்பூரின் புதியத் தொலைக்காட்சித் தொடரான ‘Highway to Somewhere’ மலேசியாவைச் சித்தரித்துள்ள விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீன மொழியிலான இந்தத் தொடர், மலேசியாவை மோசடிகள் நிறைந்த மற்றும் பாதுகாப்பற்ற நாடாகக் காட்டுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, எல்லை கடந்துச் செல்லும் பயணிகளை ஏமாற்றும் கும்பல்கள் மற்றும் ஊழல் நிறைந்த நிர்வாகம் என மலேசியாவைத் தவறாகச் சித்தரித்துள்ளதாக மலேசிய வலைத்தளவாசிகள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இங்குள்ள சில அமைப்புகளும், இது அண்டை நாட்டின் நற்பெயரைக் கெடுக்கும் செயல் என்றும், படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் தவறான பிம்பத்தை உருவாக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினர்.
இந்தத் தொடரைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக வலைத்தளங்களில் வெலுத்து வருகிறது.
இந்நிலையில், இந்தத் தொடரின் தயாரிப்பு நிறுவனமான Mediacorp, இது முழுக்க முழுக்க ஒரு கற்பனைக் கதை என்றும், எவரையும் புண்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.
உலகளவில் அதிகரித்து வரும் மோசடி சம்பவங்கள் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தொடரின் நோக்கம் என்றும் அது கூறியது.



