மலேசிய இந்தியர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்பு: 2025ஆம் ஆண்டு மலேசிய இந்தியர்களுக்கான ஆண்டு!
கோலாலம்பூர், அக்டோபர்-9 – வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்டத்தில் மலேசிய இந்திய சமூகத்தின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கொடுத்த வாக்குறுதி மிகவும் பாராட்டத்தக்கது. இவரின் இந்த முயற்சி நல்லதொரு பலனை அளிக்கும் என்று தாம் நம்புவதாக மலேசிய இந்தியப் பொருளாதார சங்கத்தின் துணைத் தலைவர் ம.வெற்றிவேலன் தெரிவித்தார்.
மலேசிய இந்தியர்களிடையே மிகவும் நெருக்குதலான ஒரு சிக்கலாகக் கருதப்படுவது போதுமான அளவில் இடுகாட்டு வசதிகள் இல்லாதிருப்பதாகும். இதற்கு நாடு முழுவதும் இடுகாட்டு நிர்மாணிப்புப் பணிகளைக் குறிப்பாக பண்டார் பாரு செந்தூலில் நடப்பிலுள்ள வசதிகள் அனைத்தும் மிகவும் பழமையாகி விட்டதோடு அது மக்கள் கூட்டம் அடர்த்தியாக உள்ள பகுதியில் இருப்பதால் அதன் சீரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு இவ்வேளையில் வலியுறுத்தப்படுகிறது.
இந்தியர்கள் குறிப்பாக பி40 பிரிவினரின் சமூகப் பொருளாதார நிலையை
மேம்படுத்துவதற்கு மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவுக்கு (மித்ரா) RM30 கோடியை ஒதுக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்நிதி எங்கள் சமூகத்தின் சிறப்புத் தேவைகளைத் தீர்த்து வைப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.
சிக்கலான நிலையில் செயல்படும் தமிழ்ப்பள்ளிகளுக்கு மாற்று இடம் கிடைப்பது மற்றொரு நெருக்குதலான பிரச்சனையாகும். இதற்குப் பொருத்தமான நிலத்தை வாங்க அல்லது புதிய பள்ளிகளை நிர்மாணிக்க நிலத்தை ஒதுக்கும்படி அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ஒவ்வோர் ஆண்டிலும் 5 தமிழ்ப்பள்ளிகளை இடமாற்றம் செய்வது ஒரு முக்கிய சாதனையாக மட்டுமின்றி நம் சமூகத்தின் மீது அரசாங்கத்திற்கு இருக்கும் உறுதிப்பாட்டையும் காண்பிக்கிறது.
பிஎன்பி போன்ற மலேசிய இந்திய சமூகத்தின் மேம்பாடு மற்றும் முதலீட்டில் கவனம் செலுத்தக்கூடிய ஒரு முதலீட்டு நிறுவனத்தை உருவாக்குவது எங்களின் சமூகப் பொருளாதாரத் தகுதியை உயர்த்துவதற்கு முக்கியமானதாக நாங்கள் கருதுகிறோம். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமைத்துவத்தின் கீழ் இத்திட்டம் ஒரு நல்ல பலனைக் கொடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
பொதுச்சேவைத் துறையில் குறிப்பாக மலேசிய இந்தியர்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படுவது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இது இந்திய சமூகத்தின் நல்வாழ்விற்குப் பங்களிப்பது மட்டுமின்றி அரசாங்கத்தின் அனைத்து நிலைகளிலும் மலேசிய இந்தியர்கள் பிரதிநிதித்திருப்பது உறுதிப்படுத்தப்படும்.
நாடு சுகந்திரம் அடைந்ததிலிருந்து மலேசிய இந்தியர்கள் அரசாங்கத்தின் விசுவாசமான ஆதரவாளர்களாகத்தான் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போதைய நடப்பு ஆட்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம் சமூகத்தின் மேம்பாடு மற்றும் சுபிட்சத்திற்குப் புதிய மைல்கற்களை நிர்ணயிக்க வாய்ப்பிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மலேசியப் பொருளாதாரத்தை நேரடியாக ஊக்குவித்து அந்நிய முதலீடுகளைக் கவர்வதற்கு அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதில் இருக்கும் தடைகளைத் தளர்வுச் செய்ய அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். கடந்த காலங்களில் அந்நியத் தொழிலாளர்கள் இந்நாட்டிற்கு வந்ததில் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அந்த வருத்தத்தைப் போதுமான உள்நாட்டுத் தொழிலாளர்களைத் தேடித் தொழில் துறைகளுக்கும் வர்த்தகங்களுக்கும் ஆதரவளிப்பதில் சமசீராக்க வேண்டும்.
ஆகையால், எங்களின் சமூகநலனில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவம் மற்றும் இணக்கப் போக்கிற்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுகளை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். வரும் 2025ஆம் ஆண்டு மலேசிய இந்திய சமூக மேம்பாடு மற்றும் சுபிட்சத்திற்கான புதிய யுகத்தைக் கொண்டு வர நாங்கள் காத்திருக்கிறோம் என்று மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்புத் தலைவருமான
எம்.வெற்றிவேலன் குறிப்பிட்டார்.