
கோலாலம்பூர், பிப்ரவரி-28 – புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலேசிய ஊடக மன்றம், உள்நாட்டு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிக்க உதவுமென நம்பப்படுகிறது.
வெளியாரின் தடைகள் மற்றும் அழுத்தமில்லாமல் அவர்கள் வேலை செய்ய இது வழி வகுக்குமென, பெர்னாமாவுக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் வணக்கம் மலேசியா நிர்வாக இயக்குநர் எம்.தியாகராஜன் தெரிவித்தார்.
சக ஊடகவியலாளர்களே மேலாண்மை செய்வதால், ஊடகத் துறையினரின் நேர்மைக்கான உத்தரவாதமும் இந்த நன்முயற்சியின் மூலம் உறுதிச் செய்யப்படுமென அவர் சொன்னார்.
அதோடு நேயர்களுக்கும் வாசகர்களுக்கும் தைரியமாக உண்மைத் தகவல்களைக் கொண்டு சேர்க்க முடியும்; ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்கள் check and balance எனப்படும் சரிபார்த்தல் மற்றும் சமநிலைப்படுத்தலை மேலும் ஆக்ககரமாக செய்ய முடியுமென தியாகராஜன் கூறினார்.
மக்களுக்கு உண்மையான, நம்பகமான மற்றும் நியாயமான தகவல்கள் கிடைப்பதை உறுதிச் செய்வதில் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட ஏதுவாக, கடந்த புதன்கிழமையன்று 2024 மலேசிய ஊடக மன்ற சட்ட மசோதாவை மக்களவை நிறைவேற்றியது.
அதே நாளில் பெர்னாமா சட்டத் திருத்தமும் நிறைவேறியது குறித்து கருத்துரைத்த தியாகராஜன், துல்லியமான தகவல்களை வழங்குவதில் முக்கியப் பங்காற்ற டிஜிட்டல் ஊடகங்களின் கரங்களும் வலுப்படுத்தப்பட வேண்டுமென்றார்.
அத்திருத்ததில் ‘ஊடக நிறுவனங்கள்’ என்ற புதிய விளக்கமும் சேர்க்கப்பட்டுள்ளது; இதன் மூலம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, பத்திரிகைகள் மட்டுமின்றி, மின்னியல் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
2003-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் வணக்கம் மலேசியாவும் இந்த அங்கீகாரத்திற்கு தான் இத்தனை நாட்களாகக் காத்திருந்ததாக தியாகராஜன் சொன்னார்.
காலங்கள் மாறி விட்டதால் டிஜிட்டல் ஊடகங்களை ஒட்டுமொத்த ஊடக அமைப்பிலிருந்து அந்நியப்படுத்த முடியாது என்றார் அவர்.
அரசாங்கத்தையும் மக்களையும் இணைக்கும் பாலமாக செயல்படும் ஊடகங்கள், நீண்ட காலமாகவே இந்த சீர்திருத்த முயற்சிகளுக்காகக் காத்திருந்தன.
அவற்றை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது வரவேற்கக்குரியது என தியாகராஜன் கூறினார்.