
திருச்சி, ஆகஸ்ட்-26 – தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, வரலாற்றில் முதல் முறையாக மலேசியாவில் நடத்தப்பட உள்ளது.
ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அதனைத் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகளவில் புகழ்பெற்றது.
அண்மையில் இலங்கையின் திரிகோணமலையிலும் முதன் முறையாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
இப்போது, இந்தியாவுக்கு வெளியே இலங்கைக்கு அடுத்து அதிகத் தமிழர்கள் வாழும் மலேசியாவிலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.
அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து, நவம்பர் மாதத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் கூறினார்.
அனைவருக்கும் மைய இடமாக விளங்குவதால் பத்து மலையில் அது நடத்தப்படலாம் என்றும் அவர் கோடி காட்டினார்.
இதற்கான ஏற்பாடுகள் தொடங்கியிருப்பதாக, தமிழகத்தின் திருச்சியில் அதற்கான இரண்டாவது கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற போது நிருபர்களிடம் சரவணன் கூறினார்.
மலேசிய மண்ணில் சுமார் 250 காளைகளைக் களத்தில் இறக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்திலிருந்து வந்து மலேசியாவில் 2 முதல் 3 லட்சம் பேர் வேலை செய்வதால், உள்ளூர் மாடிபிடி வீரர்களுடன் இணைந்து அவர்களும் இப்போட்டியில் பங்கேற்பர்.
முதன் முறையாக நடத்தப்படும் இப்போட்டியின் வெற்றியைப் பொருத்து, எதிர்காலத் திட்டங்கள் முடிவுச் செய்யப்படுமென்றார் அவர்.