கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 – கோலாலம்பூர், மஸ்ஜித் இந்தியாவில் இந்தியப் பிரஜையான மாது ஒருவர் நில அமிழ்வில் சிக்குண்டு காணாமல் போயிருக்கும் சம்பவம் குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலைத் தெரிவித்துள்ளார்.
அந்த எதிர்பாராத சம்பவத்தால் நிலைகுலைந்து போயிருக்கும் அவரின் குடும்பத்தாருக்கு, உரிய ஆதரவையும் உதவியையும் வழங்குமாறு DBKL-லையும் அவர் உத்தரவிட்டார்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளுக்குத் தடையாக உள்ள அம்சங்களுக்கு உரிய தீர்வு கண்டு, அம்மாதுவைத் தேடி மீட்கும் பணிகளைத் (SAR) தொடர்ந்து மேற்கொள்ளுமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் மஸ்ஜித் இந்தியா சாலையில் நடந்து செல்லும் போது, திடீரென நிலம் உள்வாங்கியதில் இந்தியப் பிரஜையான 48 வயது விஜயலட்சுமி 8 மீட்டர் குழிக்குள் விழுந்து காணாமல் போனார்.
இதுவரை அம்மாதுவின் செருப்பு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைத் தேடி மீட்கும் பணி பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இன்று மூன்றாவது நாளாகத் தொடருகிறது.