புத்ராஜெயா, டிசம்பர்-28, தீபகற்ப மலேசியாவுக்கான மின்சாரக் கட்டண உத்தேச உயர்வு குறித்து, PETRA எனப்படும் எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சிடம் TNB நிறுவனம் முன்கூட்டியே கலந்தோலோசிக்கவில்லை.
அதன் அமைச்சரும் துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோஃப் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
மின் கட்டண உயர்வு குறித்து அரசாங்கம் இதுவரை முடிவேதும் செய்யவில்லை என்பதே உண்மை என்றார் அவர்.
புதிய மின் கட்டண அட்டவணையை எரிசக்தி ஆணையத்துடன் இணைந்து இன்னமும் இறுதிச் செய்து வருவதாக
டிசம்பர் 20-ஆம் தேதி PETRA வெளியிட்ட அறிக்கையையும் அவர் சுட்டிக் காட்டினார்.
நிலக்கரி மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை ஆராய வேண்டியிருப்பதாலேயே, மின் கட்டண விலையையும் மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
அதனடிப்படையில் புதியக் கட்டண விகிதம் முடிவானால், அடுத்தாண்டு ஜூலையில் அமுலுக்கு வரலாம்.
ஒருவேளை கட்டணம் உயர்த்தப்பட்டால், மக்கள் நலன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நன்காராய்ந்தே அரசாங்கம் முடிவெடுக்கும்.
அந்த முடிவையும் அரசாங்கமே அறிவிக்குமென்றார் அவர்.
எது எப்படி இருப்பினும், மாதந்தோறும் மணிக்கு 1,500 கிலோவாட்டுக்கும் கீழ் மின்சாரத்தைப் பயன்படுத்தும் 85 விழுக்காட்டு வீடுகள் கட்டண உயர்வால் பாதிக்கப்படாதிருப்பது உறுதிச் செய்யப்படுமென துணைப்பிரதமர் சொன்னார்.
அடுத்தாண்டு ஜூலை முதல் தீபகற்ப மலேசியாவில் அடிப்படை மின்சாரக் கட்டணத்தை 14.2 விழுக்காடு உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, பங்குச் சந்தைக்கு வழங்கிய அறிக்கையில் முன்னதாக TNB குறிப்பிட்டிருந்தது.
இச்செய்தி பிரதமரின் காதுக்கும் எட்டிய நிலையில், மின்சாரக் கட்டண உயர்வு மக்களைப் பாதிக்கும் வகையிலிருப்பதை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் வழங்கினார்.
கட்டண விகித உயர்வு பெரும்பான்மை மக்கள் மீது திணிக்கப்படக் கூடாது; மாறாக, பெரும் பணக்காரர்கள் அல்லது கொள்ளை இலாபம் பார்க்கும் தொழில்துறையினருக்குத் தான் விதிக்கப்பட வேண்டுமென்றார் அவர்.