Latestமலேசியா

மில்லியன் கணக்கான ரிங்கிட் முதலீட்டில் வேகமெடுக்கும் பினாங்குத் தமிழ்ப் பள்ளிகளின் உருமாற்றம் – சுந்தராஜூ தகவல்

ஜோர்ஜ்டவுன், நவம்பர் 18-பினாங்கு மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டு பணிகள், மில்லியன் கணக்கான ரிங்கிட் முதலீட்டில் விரைவுபடுத்தப்பட்டு வருவதாக, வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறைகளுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தராஜூ தெரிவித்துள்ளார்.

கட்டட வசதிகள், வகுப்பறைகள், பாதுகாப்பு மற்றும் கற்றல் சூழல் ஆகியவற்றை மேம்படுத்துவதும் அந்த உருமாற்றத்தில் அடங்கும்.

சில பள்ளிகளில் ஏற்கனவே கட்டடப் புதுப்பிப்பு, வகுப்பறை மேம்பாடு, மின்சார அமைப்பு புதுப்பிப்பு, சுகாதார வசதி மேம்பாடு போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் உகந்த கல்விச் சூழலை உருவாக்கும் நோக்கில் செய்யப்படுவதாக, பினாங்கு தமிழ்ப் பள்ளிகளுக்கான சிறப்பு செயற்குழுவின் தலைருமான அவர் சொன்னார்.

இம்முயற்சிகளுக்காக இவ்வாண்டு மட்டும் 28 தமிழ்ப் பள்ளிகளுக்கும் 14 தமிழ் பாலர் பள்ளிகளுக்கும் 2.3 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், நாட்டிலேயே தமிழ்ப் பள்ளிகளுக்கு என தனியாக ஆண்டுதோறும் நிதியை ஒதுக்கும் ஒரே மாநிலமாக பினாங்கு திகழ்கிறது.

தவிர, அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் smartboard விவேகப் பலகையைத் தருவித்த முதல் மாநிலமாகவும் பினாங்கு விளங்குவதாக சுந்தராஜூ கூறினார்.

பினாங்கு தமிழ்ப் பள்ளிகளின் வசதிக் கட்டமைப்பையும் கல்வி தேர்ச்சியையும் மேம்படுத்துவதில், சிறப்பு செயற்குழு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து மாநில சட்டமன்றத்தில் பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் ஏ. குமரேசன் கேட்ட கேள்விக்கு, சுந்தராஜூ அவ்வாறு பதிலளித்தார்.

வரவிருக்கும் மாதங்களில் மேலும் பல மேம்பாட்டு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!