
சியோல், மார்ச்-7 – சாலை விபத்துகளைக் குறைப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, மூத்த குடிமக்கள் தங்கள் ஓட்டுநர் உரிமங்களை ஒப்படைக்குமாறு, தென் கொரியத் தலைநகரான சியோல் ஊக்குவிக்கிறது.
70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓட்டுநர்கள் உள்ளூர் சமூக மையங்களில் தங்கள் உரிமங்களை ஒப்படைத்து, மார்ச் 10 முதல் 613 ரிங்கிட் 55 சென் மதிப்பிலான முன் கட்டண டிரான்ஸிட் அட்டையைப் (prepaid transit pass) பெறலாம்.
முன்பு 306 ரிங்கிட் 77 சென்னாக இருந்த அவ்வட்டையின் மதிப்பு தற்போது இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது; முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் 31,800 மூத்த குடிமக்களுக்கு இது கிடைக்கும்.
இந்த டிரான்ஸிட் அட்டையை, நாடு முழுவதும் உள்ள பேருந்துகள், டாக்சிகள் மற்றும் T-money சேவையை வழங்கும் கடைகளில் பயன்படுத்தலாம்.
வயதான ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகள் தொடர்பான சமூகச் செலவுகளைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமத்தை ஒப்படைக்கும் ஒவ்வொரு மூத்த ஓட்டுநருக்கும் ஆண்டுதோறும் 1,288 ரிங்கிட்டை சேமிக்க முடியும் என, கொரிய போக்குவரத்து நிறுவனத்தின் கடந்தாண்டு அறிக்கை கூறுகிறது.