
புத்ராஜெயா, ஏப்ரல்-3-முஸ்லீம் அல்லாத வழிபாட்டு இடங்களுக்கான புதிய திட்ட வழிகாட்டி நகலை அமைச்சரவை விரைவில் ஆய்வு செய்யவுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் அதனைத் தெரிவித்தார்.
வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சான KPKT வரைந்துள்ள இந்த வழிகாட்டி, முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் திட்டமிடல், கட்டுமானம், நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை உட்படுத்தியுள்ளது.
இதனிடையே ஒருமைப்பாட்டு அமைச்சு ‘Prisma’ எனும் புதியத் தளத்தை அறிமுகப்படுத்துகிறது.
இது, சமூகத்தில் எழும் உணர்ச்சிப்பூர்வமான பிரச்னைகளை தரவின் அடிப்படையில், முழுமையான முறையில் கையாளும் என ஏரன் கூறினார்.
இது தவிர, 12 புதிய சமூக மத்தியஸ்த மையங்களும் அமைக்கப்படவுள்ளன.
10 மாநிலங்கள், கோலாலம்பூர் மற்றும் லாபுவான் கூட்டரசு பிரதேசங்களில் அவை தொடங்கப்படும்.
இவை, அண்டை வீட்டார் இடையே சத்தம், வாகன நிறுத்தம், சுற்றுச்சூழல் பிரச்னைகள் போன்ற அன்றாட பிரச்னைகள் பெரிதாக வெடிக்காமல், சமரசம் மூலம் தீர்க்க உதவும் என அமைச்சர் சொன்னார்.



