
கோலாலம்பூர், நவ 6 – மூக்கில் நுகர்வதற்கு பயன்படுத்தப்படும் தாய்லாந்தைச் சேர்ந்த பிரபலமான HongThai Brand மூலிகை மருந்து விற்பனை மற்றும் விநியோகத்தை மலேசியா தடை செய்துள்ளது, நுண்ணுயிர் மாசுபாடு காரணமாக தாய்லாந்து அதிகாரிகள் உடனடியாக அம்மருந்தை திரும்பப் பெற்றனர்.
ஹாங் தாய் ஃபார்முலா 2 மூலிகை , மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பதிவு செய்யப்படாத மருந்துகளை விற்பனை செய்வதும் வைத்திருப்பதும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் கட்டுப்பாடு விதிமுறைகளின் கீழ் ஒரு குற்றமாகும்.
சுகாதார தர சோதனைகளில் தோல்வியடைந்ததற்காக தாய்லாந்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அந்த மூலிகை மருந்து தயாரிப்பை திரும்பப் பெற்ற சில நாட்களுக்குப் பிறகு சுகாதார அமைச்சின் தடை வந்துள்ளது.
ஹாங் தாய் பார்முலா 2 பல மின் வணிக தளங்களில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்கப்படுகிறது. தயாரிப்புப் பட்டியல்களை உடனடியாக நீக்கக் கோரி, சம்பந்தப்பட்ட தளங்களுக்கு சுகாதார அமைச்சு புகார்களை சமர்ப்பித்துள்ளது.
மேலும், பொதுமக்களுக்குப் பொருளை வாங்குவதைத் தவிர்க்கவும், அதைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.



