கோலாலம்பூர், ஜனவரி- 6 – 17 பன்னாட்டு இந்திய நிறுவனங்களுடனான ஒத்துழைப்பின் வாயிலாக, கடந்தாண்டு மலேசியர்களுக்கு சுமார் 2,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
AI அதிநவீன தொழில்நுட்பம், இலக்கவியல் துறை, இணையப் பாதுகாப்பு, மென்பொருள் உருவாக்கம் மற்றும் அடுத்தத் தலைமுறை தொழில்நுட்பம் ஆகியத் துறைகளை அவை உள்ளடக்கும்.
கடந்தாண்டு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட இந்தியப் பயணத்தின் போது கையெழுத்தான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்த வேலை வாய்ப்பும் ஒன்றாகும்.
இந்நிலையில், நாளை இந்தியா பயணமாகும் அமைச்சர், இன்னும் கூடுதலான வேலை வாய்ப்புகள் தொடர்பிலும் பேசப்படும் என கூறினார்.
ஒடிசா மாநிலத் தலைநகர் புபனேஸ்வரில் நடைபெறும் இந்திய வம்சாவளிகளுக்கான பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் பங்கேற்கும் நோக்கில், கோபிந்த அங்குச் செல்கிறார்.
உலகம் முழுவதுமுள்ள இந்திய வம்சாவளிகளை ஒன்றிணைக்கும் இந்த வருடாந்திர மாநாடு இம்முறை ஜனவரி 8 தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
பன்னாட்டு நிறுவனங்களும் அதில் பங்கேற்கவிருப்பதால், இலக்கவியல் துறையில் பல்வேறு வாய்ப்புகளையும் ஒத்துழைப்புகளையும் மேற்கொள்ள இம்மாநாட்டை மலேசியா நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமென அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வேளையில், AI தொழில்நுட்பத்தால் மனிதர்களுக்கு வேலையில்லாமல் போகும் அபாயம் குறித்த கவலையை, அமைச்சு நன்கறிந்திருப்பதாக அவர் கூறினார்.
அதற்காகத்தான், மனிதவள அமைச்சின் மேற்பார்வையில், AI-யால் அடுத்த 5 ஆண்டுகளில் பாதிக்கப்படக் கூடிய வேலைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் எந்தெந்த வேலைகள் பாதிக்கப்படலாமென்பதை முன்கூட்டியே அறிந்து, அவற்றை ஊழியர்கள் தக்க வைத்துக் கொள்ள உதவுவதுடன், திறன் தேர்ச்சிகளை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
AI-யால் சில வேலைகளுக்கு ஆபத்து என்றாலும், அதே AI-யால் பல புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகின்றன என்பதை மறுக்க முடியாது என கோபிந்த் சுட்டிக் காட்டினார்.
பாதிக்கப்படும் வரை காத்திராமல், முன்கூட்டியே தயாராவதன் மூலம், வேலை போகும் போது இன்னொரு வேலைக்கு மாற முடியுமென இன்று இந்திய ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சிறப்புச் சந்திப்பில் கோபிந்த் சிங் பகிர்ந்துக் கொண்டார்.