
கோலாலம்பூர், ஏப்ரல்-4-மலேசிய சீனர் சங்கமான ம.சீ.சவின் முன்னாள் தலைவர் துன் Dr லிங் லியோங் சிக், வயது முதுமையால் 82 வயதில் இன்று காலமானார்.
பல அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பேராக், குவாலா கங்சாரில் பிறந்த அவர், முதலில் மருத்துவராக பணியாற்றிய பின்னர், 1970-களில் அரசியலுக்கு வந்தார்.
படிப்படியாக உயர்ந்து 1986-ஆம் ஆண்டில் ம.சீ.ச தலைவரான லிங், அக்கட்சி வரலாற்றிலேயே நீண்ட காலம் அதாவது 17 ஆண்டுகளாக தலைவராக இருந்தவர் என்ற சாதனைக்குரியவராவார்.
அதே 1986 முதல் 2003 வரை, அவர் போக்குவரத்து அமைச்சராகவும் பணியாற்றினார்.
ஒரு காலத்தில் எப்படி பொதுப்பணி அமைச்சர் என்றாலே அனைவருக்கும் மறைந்த துன் எஸ். சாமிவேலு நினைவுக்கு வருவாரோ, அதே போல் போக்குவரத்து அமைச்சர் என்றாலே லிங் லியோங் சிக் தான் மலேசியர்களுக்கு பரிச்சயமானவர்.
இதனாலேயே, ஜோகூர் லாபீஸ் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருந்த போது, அத்தொகுதி _VIP_ அந்தஸ்துடன் திகழ்ந்தது.
அரசியலைத் தவிர, கல்வித்துறையிலும் அவர் பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.
குறிப்பாக, ம.சீ.சவின் துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார்.
மலேசியாவின் அரசியல் மற்றும் கல்வி துறைகளில் லிங் லியோங் சிக்கின் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.



