
கோலாலம்பூர், பிப்ரவரி 24 – யயாசன் அக்கால்பூடி (Yayasan Akalbudi) தொடர்பான 47 ஊழல் குற்றச்சாட்டுகள் வழக்கில், துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமீடீ (Datuk Seri Dr Ahmad Zahid Hamidi) தாக்கல் செய்த முழுமையான விடுதலை மனுவுக்கு சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் (A-GC) எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால், இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதித்துறை மறுஆய்வு தொடங்க அனுமதி கோரும் மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் முழுமையான விடுதலை வழங்கப்பட்டால் தங்களின் சட்ட சவால் பொருள் இழந்து விடும் என மலேசிய வழக்கறிஞர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.
அதே வேளை, ஸாஹிட் தரப்பின் வழக்கறிஞர், அரசு தரப்பு மேல் நடவடிக்கை எடுக்க விருப்பமில்லை என்றும், குற்றச்சாட்டுகள் தொடர்வது அநியாயம் என்றும் வாதிட்டார்.
கடந்த 2023 செப்டம்பர் 4 ஆம் தேதியன்று ஸாஹிட் ‘விடுதலை அல்லாத விடுவிப்பு’ (DNAA) பெற்றிருந்தார். இம்மனு அனுமதிக்கப்பட்டால் அவர் முழுமையாக விடுவிக்கப்படுவார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



