
ஷா ஆலாம், ஏப்ரல்-1-சிலாங்கூர், ரவாங்கில் ஓர் இந்துக் கோவிலை உடைக்க Yayasan Kubra அறக்கட்டளைக்கு செலாயாங் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்திருந்த தடையுத்தரவை, ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.
எனினும், அம்முடிவுக்கானக் காரணத்தை நீதிபதி Suriyati Hasimah Hashim தெரிவிக்கவில்லை என, ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய நிர்வாகத்தின் வழக்கறிஞர்களான ராஜேஷ் மற்றும் Sachpreetraj Singh Sohanpal கூறினர்.
“உயர் நீதிமன்றத்தின் இம்முடிவால் உண்மையிலேயே நாங்கள் தெளிவற்ற நிலையில் உள்ளோம்” என ராஜேஷ் கூறினார்.
என்ற போதிலும் இது குறித்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் தீர்ப்பு வரும் வரை, கோவிலின் எஞ்சிய பகுதியை உடைக்கக் கூடாது என Kubra அறக்கட்டளைக்கு தாங்கள் ‘எச்சரிக்கைக் கடிதம்’ அனுப்பியுள்ளதாகவும் ராஜேஷ் சொன்னார்.
நில தகராறு இருப்பதால், அக்கோயிலை உடைக்குப் பணிகளைத் தொடரக் கூடாது என, மார்ச் 13-ஆம் தேதி செலாயாங் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் Kubra அறக்கட்டளைக்கு உத்தரவிட்டது.
அந்த உச்சிமலை முனீஸ்வரன் கோவில் 1995 முதல் அங்கு செயல்பட்டு வரும் நிலையில், நடப்பு நிலை உரிமையாளர் 2001 முதலே நிலத்துக்குச் சொந்தக்காரராகியுள்ளார்.
எனவே, இதற்கு முதலில் தீர்வு காண வேண்டும்; அதுவரை கோயில் உடைப்பை மேற்கொள்ளக் கூடாது.
இவ்விவகாரத்தை முறையாக கையாளா விட்டால், பொது அமைதி கெடும் என்றும் செலாயாங் மேஜிஸ்திரேட் கூறியிருந்தார்.
முன்னதாக, ஆலய நிர்வாகத்திடம் கலந்தாலோசிக்காமலும், ஊராட்சித் துறையிடம் தெரிவிக்காமலும், பிப்ரவரி 11-ஆம் தேதி தன்னிச்சையாக மண்வாரி இயந்திரத்தை கொண்டு வந்து அக்க்கோயிலின் ஒருபகுதியை இடித்துத் தள்ளியதன் பேரில், போலீஸார் 4 பேரைக் கைதுச் செய்தனர்.



