
வாஷிங்டன், ஜனவரி-11 – கிரீன்லாந்தை அமெரிக்கா தன்வசமாக்கியே தீர வேண்டுமென, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்யா மற்றும் சீனா அங்கு செல்வதைத் தடுக்க இது அவசியம் என்றார் அவர்.
“நாடுகள் குத்தகையை அல்ல, உரிமையை பாதுகாக்க வேண்டும். எளிய வழியிலோ கடினமான வழியிலோ அமெரிக்கா கிரீன்லாந்தை பாதுகாக்கும்” என வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் பேசினார்.
டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தரப்புகள், அத்தீவு விற்பனைக்கு இல்லை என தெளிவுபடுத்தியுள்ள நிலையில் ட்ரம்ப் அவ்வாறு சூளுரைத்துள்ளார்.
இவ்வேளையில், “நாங்கள் அமெரிக்கர்களாகவும், டென்மார்க் நாட்டவர்களாகவும் இருக்க விரும்பவில்லை. மாறாக, கிரீன்லாந்து நாட்டவர்களாகவே இருக்க விரும்புகிறோம்” என்று கிரீன்லாந்து தலைவர்கள் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
வட அமெரிக்கா மற்றும் வட துருவம் இடையே அமைந்துள்ள கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் பாதி சுயாட்சி பெற்ற பிரதேசமாகும்.
இது ஏவுகணை எச்சரிக்கை முறைக்கும் கடல் கண்காணிப்புக்கும் முக்கிய இடமாகக் கருதப்படுகிறது.
அமெரிக்கா ஏற்கனவே அங்கு பிட்டுஃபிக் (Pituffik) விமானத் தளத்தை இயக்கி வருகிறது.
நேட்டோ கூட்டமைப்பைச் சேர்ந்த கனடா உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய நாடுகள் டென்மார்க்கிற்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளன.
“வட துருவத்தின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் பிராந்திய நெறிகள் தொடர்பான ஐநாவின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு கூட்டாகவே அணுகப்பட வேண்டும்” என அவை வலியுறுத்தியுள்ளன.
காலநிலை மாற்றத்தால் பனிகள் உருகுவதால், கிரீன்லாந்தின் அரிய கனிமங்கள், யுரேனியம், இரும்பு, மற்றும் எண்ணெய் வளங்கள் மீது உலகளாவிய ஆர்வம் அதிகரித்துள்ளது.
எனவே தான், மற்ற நாடுகள் முந்திக் கொள்வதற்கு முன் கிரீன்லாந்தை அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்திட வேண்டும் என்பதில் ட்ரம்ப் குறியாக உள்ளார்.



