தீபங்கள் ஒளிர்ந்து ஒளி கூட்டும் தீபத்திருநாளை வரவேற்கும் வகையில் ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் ’மடானி’ தீபத்திருநாள் கொண்டாட்டம் மிக விமரிசையாக நடந்தேறியது. நல்லிணக்கப் பிணைப்புத் திட்டத்தின் கீழ் பல இனங்களோடு இணைந்து இப்பண்டிகையைக் கொண்டாடும் முயற்சியைச் செவ்வனே செயல்படுத்தியது ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி.
ரினிதோட்டத்தமிழ்ப்பள்ளியின்நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இணைந்து இந்நிகழ்வினை வெற்றிகரமாக நடத்தினர். இந்நிகழ்வில் முத்தியாரா ரினி இடைநிலைப்பள்ளி, முத்தியாரா ரினி தேசியப்பள்ளி மற்றும் பூசு சீனப்பள்ளி ஆகிய பள்ளிகளைப் பிரதிநிதித்து 6 ஆசிரியர்களும் 15 மாணவர்களூம் கலந்து சிறப்பித்தனர். இன்றைய நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய தலைமையாசிரியை திருமதி.சு.தமிழ்ச்செல்வி அவர்கள் பண்பட்ட கலாசாரங்களைப் பேணிக்காக்கும் நம் மலேசியத் திருநாட்டில், அனைத்துப் பண்டிகைகளையும் ஒற்றுமையுடன் அதன் சிறப்பினைப் பறைசாற்றும் வகையில் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தமதுரையில் குறிப்பிட்டார்.
நாதஸ்வரமேளதாள இசையோடு தொடங்கிய நிகழ்வில் தீபாவளிபண்டிகையின் அருமைபெருமைகளை எடுத்துரைக்கும்வகையில் தோரணம்பின்னுதல், முறுக்கு பிழிதல், ரங்கோலி கோலம் வரைதல், கோலாட்டம் ஆடுதல் போன்ற குழு நடவடிக்கைகளோடு தீபத்திருநாள் தொடர்பான விளக்கங்களைக் காட்டும் வகையில் மூலைகளும் ஆசிரியர்களின் கைவண்ணத்தில் கண்களைக் கவர்ந்தன. அழைப்புப் பள்ளிகளிலிருந்து வருகையளித்த ஆசிரியர்களும் மாணவர்களும் இந்நிகழ்வில் ஆர்வமுடன் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து இன்றைய நிகழ்வில் நம்மோடு கைகோர்த்த ஆசிரியர்களும் மாணவர்களுக்கும் நற்சான்றிதழ்களும் பலகாரக்கூடைகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மேலும், நாவிற்குச் சுவையளிக்கும் வகையில் அருஞ்சுவை உணவும் வழங்கப்பட்டது.
மேலும், இன்றைய நிகழ்வில் 2024 ஆம் ஆண்டு தீபாவளி பெருநாளை முன்னிட்டு சுல்தான் இப்ராஹிம் ஜோகூர் அறக்கட்டளையும் சுல்தான் ரோஹாயா அறக்கட்டளையும் இணைந்து இந்திய குடும்பங்களுக்கு உணவுக்கூடை வழங்கும் நிகழ்வும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வினை ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரிய சங்கத் துணைத்தலைவர் திரு.பிரகாஷ் மற்றும் அவர்தம் செயலளவையினர் பள்ளி நிர்வாகக் குழுவினரோடு இணைந்து வழிநடத்தினர். மேலும், துணைத்தலைவரும் செயலவையினரும் அனைத்து மாணவர்களுக்கும் தீபாவளி பண அன்பளிப்பு வழங்கி மகிழ்வித்தனர்.
கலாசார மிளிர்வோடு மூவினங்களும் ஒன்றிணைந்த இந்நிகழ்வில் நம் சமூகத்தின் மீதான அன்பையும் அரவணைப்பையும் பகிர்ந்து இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற துணைநின்ற பள்ளியின் துணைத்தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரிய சங்க செயலவையினர், பெற்றோர்கள் மற்றும் மாணவ மணிகள் அனைவரும் நன்றியினையும் தம் தீபாவளி வாழ்த்துகளையும் உளமார தெரிவித்துக் கொண்டார்.