
லங்காவி, அக் 30 –
நாட்டின் முதன்மையான சகிப்புத்தன்மை போட்டியான அயர்ன்மேன் மலேசியா 2025 ஐ இந்த சனிக்கிழமை 13 மணி நேரத்திற்குள் முடிக்க மூவர் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் ( Syed Saddiq ) உறுதியாக உள்ளார்.
முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரான 32 வயதுடைய அவர் , இப்போட்டியை வெற்றிகரமாக முடித்தால், மூவர் மக்களுக்கு உறுதியளிக்கப்பட்ட 1 மில்லியன் நன்கொடையைப் பெறுவதற்கான சவாலை ஏற்றுக்கொள்கிறார். உள்ளூர் பேஷன் பிராண்டான பிரிமா வேலட் (Prima Valet ) இந்த சவாலை வெளியிட்டது.
3.8 கிலோமீட்டர் தூரத்திற்கு நீச்சல் , 180 கிலோ மீட்டர் சைக்கிளோட்டம் மற்றும் 42.2 கிலோமீட்டர் நெடுஞ்தூர ஓட்டம் ஆகியவற்றைக் கொண்ட டிரையத்லான் (Trithlon ) போட்டியை சைட் சாடிக் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்தால் ஊக்கத்தொகையை 1 மில்லியன் ரிங்கிட் வழங்குவதற்கு பிரிமா வேலட் உறுதியளித்தது.
இந்த சவால் தனிப்பட்ட லாபத்திற்காக அல்ல, மாறாக தனது தொகுதி மக்களுக்கு உதவுவதற்காக என்று நேற்றிரவு தனது முகநூல் மற்றும் டிக்டோக் கணக்குகளில் பகிரப்பட்ட பதிவில் சைட் சாடிக் குறிப்பிட்டார்.
தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், அவர் தனது தீவிர பயிற்சியின் கிளிப்களைப் பகிர்ந்து கொண்டதோடு தலையையும் மொட்டையடித்துக் கொண்டார், இந்த நடவடிக்கை போட்டியில் மூன்று வினாடிகள் தனக்கு சாதகமா இருக்கும் என அவர் கேலி செய்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் சைக்கிளோட்டத்தில் கலந்துகொண்டபோது மரக்கிளையில் மோதியதில் போட்டியை 13 மணி நேரம் 13 நிமிடங்களில் முடித்தார்.
எனினும் போட்டியை முடிப்பதற்கான ஒட்டு மொத்த நேரத்தில் இது 30 நிமிடம் தாமதமாகும். ஐயன்மேன் மலேசியா மற்றும் ஐயன்மேன் 70.3 லங்காவி 2025 ஆகியவை இந்த சனிக்கிழமை லங்காவித் தீவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் 65 நாடுகளைச் சேர்ந்த 1,800 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.



