
லஹாட் டாத்து, ஏப் 13-லஹாட் டாத்துவில் Begahak 2 தோட்டத்தில் நேற்று யானை தாக்கியதில் 69 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
மதியம் சுமார் 2 மணியளவில், பாதிக்கப்பட்டவரும் அவரது 38 வயது மகனும் செம்பனை தோட்டத்தில் இருந்தபோது திடீரென ஒரு காட்டு யானை தோன்றியதாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக லஹாட் டாத்து போலீஸ் துணைத்தலைவர் ஜிம்மி பன்யாவ் ( Jimmy panyau ) கூறினார்.
அந்த ஆடவர் தனது மகனுடன் தோட்ட வாயிலை மூடிக்கொண்டிருந்தபோது அந்த விலங்கு அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரின் மகன் அங்கிருந்து தப்பியோடிய வேளையில் அந்த யானை அவரது தந்தையை மிதித்த பின் சிறிது நேரத்திற்குப் பிறகு, அவ்விடத்தை விட்டு வெளியேறியது.
காயத்திற்குள்ளான ஆடவரை அவரது மகன் சிகிச்சைக்காக லஹாட் டாத்து மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றபோதிலும் அவர் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் அறிவித்தனர்.
கெண்டைக்கால் எலும்பு மற்றும் விலா எலும்புகளில் ஏற்பட்ட முறிவுகள் உட்பட கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்ததால் அந்த ஆடவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.



