புத்ராஜெயா, அக்டோபர் 4 – லெபனானிலிருந்து வெளியேறிய 4 மலேசியர்கள் பாதுகாப்பாக மலேசியாவிற்குத் திரும்பியதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது.
அந்நால்வரும் இன்று காலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
பெய்ரூட்டிலுள்ள (Beirut) மலேசியத் தூதரகம் உதவியுடன் வணிக விமானம் மூலம் அவர்கள் தாயகம் திரும்பியதை அமைச்சு அறிக்கையின் வாயில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், லெபனானிலுள்ள மீதமுள்ள 16 மலேசியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சு கூறியிருக்கிறது.
இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், அங்கு இருக்கும் மலேசியர்களின் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து தேவையான உதவிகளை வழங்குவோம் என்று பெய்ரூட்டிலுள்ள மலேசியத் தூதரகம் தெரிவித்திருக்கிறது.