
கோலாலம்பூர், ஜூலை-11 – 14 வயது பெண் பிள்ளையின் நிர்வாணப் படத்தை சமூக ஊடகத்தில் பரப்பப் போவதாக வட்டி முதலை மிரட்டிய ஒரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Yap என அடையாளம் கூறப்பட்ட அப்பெண் இணைய வேலை வாய்ப்பு மோசடியொன்றில் சிக்கியப் பிறகு இந்த கசப்பான அனுபவத்திற்கு ஆளானார்.
‘பகுதி நேர வேலை வாய்ப்பு’ என வாட்சப்பில் வந்த விளம்பரத்தால் கவரப்பட்டவர் ஒரு டெலிகிராம் குழுவில் சேர்க்கப்பட்டார்.
வேலையைத் தொடங்க 30 ரிங்கிட்டைச் செலுத்தியவருக்கு, 2 வேலைகளை முடித்துக் கொடுத்ததும் கமிஷனாக 60 ரிங்கிட் கொடுக்கப்பட்டது.
எனினும் மூன்றாவதாக கொடுக்கப்பட்ட வேலையில் அவர் தவறு செய்ததாகவும், மேலும் தொடர வேண்டுமென்றால் 500 ரிங்கிட் கட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டது.
பின்னர் மேலும் 1,000 சிலர் ரிங்கிட்டை கட்டுமாறு அவர் பணிக்கப்பட்டுளார்; ஆனால் கையில் பணமில்லை.
இந்நிலையில் ஜூலை 5-ஆம் தேதி Terry எனும் வட்டி முதலையை அணுகி 1,000 ரிங்கிட் கடன் வாங்க அவர் முயற்சித்துள்ளார்.
வயதுகுறைந்தவர் என்பதால் வட்டி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது; எனவே தனது நிர்வாணப் படத்தையும் குடும்பத்தாரின் விவரங்களையும் கொடுக்குமாறு Yap-பிடம் கூறப்பட்டது.
பிறகு e-wallet வழியாக 1,000 ரிங்கிட் மாற்றப்பட்டு, அடுத்த 6 நாட்களுக்குள் 1,500 ரிங்கிட்டாக வட்டியோடு திருப்பித் தர வேண்டுமென Terry-யும் கூறியுள்ளார்.
வீட்டுக்கு விஷயம் தெரிந்து Yap-பின் தந்தை கடந்த திங்கட்கிழமை அந்த 1,500 ரிங்கிட்டை வட்டி முதலையிடம் திருப்பித் தந்து விட்டார்.
எல்லாம் முடிந்து விட்டது என நினைத்தால், தொடக்கத்தில் பணம் செலுத்தப்பட்டதில் கணினி முறையில் கோளாறு ஏற்பட்டு விட்டதாகவும் எனவே இப்போது 15,000 ரிங்கிட்டை கொடுக்க வேண்டுமென்றும் Terry மீண்டும் வற்புறுத்தியுள்ளார்.
கேட்டப் பணத்தை கொடுக்கவில்லை என்றால் Yap-மின் நிர்வாணப் படத்தை வைரலாக்கப் போவதாக Terry மிரட்டியதால், Yap-பின் குடும்பம் போலீஸில் புகார் செய்தது.
நேற்று கோலாலம்பூரில் MCA பொது புகார் பிரிவு நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பாதிக்கப்பட்ட குடும்பம் நடந்தவற்றை பகிர்ந்தது.