
கோலாலம்பூர், நவம்பர்-7 – வணக்கம் மலேசியா ஏற்பாட்டில் 13வது ஆண்டாக மலர்ந்துள்ள இவ்வாண்டு ‘மாணவர் முழக்கம்’, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி அதன் மாபெரும் இறுதிச் சுற்றை நெருங்கியுள்ளது.
அடிப்படையில் தேர்வுச் சுற்றுக்கு 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் காணொளிகளை அனுப்பியிருந்த நிலையில், அவர்களிலிருந்து 50 மாணவர்கள் காலிறுதிச் சுற்றில் பங்கேற்றிருந்தனர்.
அவர்களிலிருந்து நேற்று 20 பேர் பங்கேற்ற அரையிறுதிச் சுற்றில் கடும் போட்டிக்குப் பிறகு, நால்வர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
புத்திக்கூர்மையுடன் கூடிய தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நாவன்மையல் சோதிக்கும் இப்போட்டியின் அரையிறுதிச் சுற்று முடிவுகளின்படி, மாபெரும் இறுதிச் சுற்று ஜோகூர், பேராக் மற்றும் பஹாங் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே இடம்பெறவுள்ளது.
ஜோகூர், ரினி தமிழ்ப்பள்ளி மாணவன் தஷ்வின் ஸ்ரீ கவியரசு, ஜோகூர் மவுண்ட் ஆஸ்டின் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீ ஷுபகீர்த்தி சுந்தரேசன், பேராக் மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின் புனிதமலர் ராஜசேகர், பஹாங் பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளியின் பவதாரணி மருதமுத்து ஆகியோரே அவர்களாவர். இவர்கள் அனைவருக்கும் வயது 12.
இதனிடையே, புள்ளிகளின் அடிப்படையில் இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை நழுவ விட்டாலும், தங்களின் சிறந்த வாதத்திறனை வெளிப்படுத்தி நடுவர்களை அசத்திய பேராக் பாதாக் ராபிட் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 11 ஜெய ஜோனதன் மஹேஷ், பேராக் ஹீவூட் தமிப்பள்ளியைச் சேர்ந்த 12 வயது சுபநாகஸ்ரீ நாகராஜன், ஜோகூர் கூலாய் பெசார் தமிழ்ப்பள்ளையைச் சேர்ந்த 10 வயது ராகவர்ஷினி குருநாதன், ஜோகூர் பாசிர் கூடாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 10 வயது சுதீஷா ஸ்ரீ தரன், மற்றும் சிலாங்கூர் பத்துமலை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 12 வயது குமர கிரீஷ் மணிகண்டன் ஆகிய 5 மாணவர்கள் நட்சத்திர பேச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அரையிறுதிச் சுற்று எதிர்பார்த்ததை விட கடுமையாக இருந்ததாக, போட்டி நடுவரான வழக்கறிஞரும் தமிழ் ஆர்வலருமான கனல்வீரன் தெரிவித்துள்ளார்.
அரையிறுதிச் சுற்றில் 20 போட்டியாளர்களின் பேச்சாற்றலும் மொழிவளமும் பிரமிக்க வைத்ததாக, இணை நடுவரான முனைவர் ரஹிம் கமாலுடின் கூறினார்.
இந்நிலையில் மாபெரும் இறுதிச் சுற்று, அதன் பெயருக்கு ஏற்றால் போல் அதிரடியக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை எனவும் தனது எதிர்ப்பார்ப்பை வெளிப்படுத்தினார்.
இவ்வாண்டுக்கான மாபெரும் இறுதிச் சுற்று எதிர்வரும் டிசம்பர் மாதம் நேரடி நிகழ்ச்சியாக கோலாலம்பூரில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறுது.
இந்நிகழ்சியின் போது மாபெரும் இறுதிச் சுற்றோடு., அரையிறுதிச் சுற்று போட்டியாளர்களுக்கான பரிசளிப்பு அங்கமும் இடம்பெறும்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மொழித்திறன், சிந்தனை ஆற்றல், பேச்சுத் திறமை ஆகியவற்றை வளர்க்கும் சமூகப் கடப்பாட்டோடு வணக்கம் மலேசியா தொடர்ந்து இப்போட்டியினை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



