![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/10/habana-apagon-cuba.jpg)
ஹவானா, அக்டோபர்-19 – கியூபா நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால், எரிசக்தி ஆற்றலைப் பாதுகாக்கும் முயற்சியில், பள்ளிகளும் அத்தியாவசியமற்றத் தொழில்களும் மூடப்பட்டுள்ளன.
பெரும்பகுதி அரசு ஊழியர்களையும் கியூபாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கம் வெள்ளிக்கிழமையன்று சீக்கிரமாகவே வீட்டுக்கு அனுப்பியது.
அரசே நடத்தும் சுகாதார மற்றும் உணவுத் தொழில்துறை மட்டுமே வெள்ளிக்கிழமை செயல்பட அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அத்தீவு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் 12 மணி நேரங்களைத் தாண்டிய மின்வெட்டுப் பிரச்னையால் அவதிப்படுகின்றனர்.
ஏற்கனவே, தண்ணீர்-உணவுத் தட்டுப்பாடு, எரிபொருள் மற்றும் மருந்து பற்றாக்குறை ஆகியவற்றால் அந்நாடு தத்தளித்து வருகிறது.
தற்போது மக்களுக்கான மின் விநியோகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் கியூபா அரசாங்கம் அதிரடி நடவடிக்கைளில் இறங்கியுள்ளது.
அது குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய கியூபா பிரதமர், நடக்கும் பிரச்னைகளுக்கு அண்மையில் தாக்கிய பெரும் சூறாவளியே காரணமென்றார்.
எனினும் வரும் நாட்களில் மின் விநியோகம் கட்டம் கட்டமாக சீரடையுமென அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.