வலுக்கும் நெருக்குதல்; பதவி விலகுகிறார் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
டொரோண்டோ, ஜனவரி-7 – 9 ஆண்டுகளாக கனடாவின் பிரதமராக இருந்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
அக்டோபரில் நடைபெறும் பொதுத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சிக்குத் தலைமைத் தாங்க தாம் சரியான ஆள் அல்ல எனக் கூறி அவர் அவ்வறிவிப்பை வெளியிட்டார்.
ஆளுங்கட்சியின் புதியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கனடிய நாடாளுமன்றமும் மார்ச் 24 வரை முடக்கப்படும் என்றார் அவர்.
11 ஆண்டுகளாக லிபரல் கட்சியின் தலைவராக உள்ள ட்ரூடோ, அண்மையக் காலமாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வந்தார்.
வரியை உயர்த்தப் போவதாக டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்தது தொடங்கி, கூட்டணி அரசாங்கத்திலிருந்து முக்கியப் பங்காளிகள் வெளியேறியது, மற்றும் கருத்துக் கணிப்பில் அவரின் செல்வாக்கு பாதாளத்திற்கு சரிந்தது என அப்பட்டியல் நீளுகிறது.
குறிப்பாக அடுத்த பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி படுதோல்வி காணுமென கருத்துத் கணிப்புகள் கூறுவதால், ட்ரூடோ பதவி விலக வேண்டுமென சொந்தக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே அவருக்கு நெருக்குதல் அளித்து வருகின்றனர்.
இவ்வேளையில் லிபரல் கட்சிக்குப் புதியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ட்ரூடோ பிரதமராகக் தொடருவார் என்பதால், ஜனவரி 20-ல் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கும் போது இவரே பிரதமராக இருப்பார்.
43 வயதில், உலகின் மிக இள வயது பிரதமர்களில் ஒருவராக 2015-ல் பதவியேற்ற ட்ரூடோ, அடுத்த 2 தேர்தல்களிலும் வெற்றிப் பெற்று கனடாவின் நீண்ட கால பிரதமர்களில் ஒருவராகப் பெயர் பெற்றுள்ளார்.
இவரின் தந்தை Pierre Trudeau-வும் கனடாவின் முன்னாள் பிரதமர் ஆவார்.